தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும் என்பதோடு தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு என்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் பிரச்சினை உள்ளது, ஒரு தரப்பினரது பிரச்சினைக்கு அரசியலமைப்பு ஊடாக மாத்திரம் எவ்வாறு தீர்வு காண்பது என கேள்வி எழுப்பியள்ளார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு இலங்கையின் தென் மாகாணத்தில் கடும் எதிர்ப்பு காணப்படும் பின்னணியில் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.
30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை துரிதமாக அபிவிருத்தி செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்தி அப்பிரதேச மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தியிருந்ததாகவும் , அந்த உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.