Breaking
Fri. May 17th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

ஒரு பாராளுமன்ற தேர்தலின் போது ஒரு கட்சி அல்லது சுயேட்சை குழு தேசிய ரீதியாக பெறுகின்ற வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் 29 பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்தளிக்கப்படுவார்கள்.கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸானது ஐ.தே.கவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் அதற்கு இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற  உறுப்பினர்கள் கிடைத்திருந்தனர்.இதன் போது அத் தேசியப்பட்டியலை குறிவைத்து மு.காவை சேர்ந்த பலரும் அமைச்சர் ஹக்கீமை நாடிச் சென்றனர்.அமைச்சர் ஹக்கீம் அவர்களில் யாரை தெரிவு செய்வதென்பதில் மிகப் பெரும் சவாலை எதிர்நோக்கியிருந்தார்.தேசியப்பட்டியலை குறி வைத்த சிலர்  தங்களுக்கு தேசியப்பட்டியல் கிடைக்காத போது தாங்கள் மயில் பக்கம் பறந்துவிடுவோம் என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தனர்.

கடந்த பாராளுமன்ற தேர்தல் வாக்குகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மயிலின் கை ஓங்கிக் காணப்பட்டது.இச் சந்தர்ப்பத்தில் மு.கா தனது இருப்பை தொடர்ச்சியாக தக்க வைக்க மு.காவினுள் சிறு பிளவுகளும் ஏற்பட்டுவிடக்கூடாது.பிளவுகள் ஏற்பட்டாலும் அவர்கள் மயில் பக்கம் மாறிவிடக் கூடாது.இப்படி இருக்கையில் அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியலை வழங்கினால் சிலர் மு.காவுடன் முரண்படுவது தவிர்க்க முடியாத நிலையிலேயே இருந்தது.தற்போதும் அப்படியே உள்ளது.இது மயிலின் வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்துவிடலாம்.கடந்த பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து மிக விரைவில் கிழக்கு மாகாண சபை தேர்தல் வரக் கூடிய நிலை இருந்தது.இதில் அ.இ.ம.கா ஒரு குறித்த இடத்தை அடையுமாக இருந்தால் அது மு.காவின் தொடர்ச்சியான பயணத்திற்கு சவாலாக அமையும்.இதில் அவர்களை தோல்வியடையச் செய்தால் அதன் பிறகு மயிலால் வாலாட்ட முடியாது போய்விடும்.குறைந்தது இத் தேர்தல் வரையாவது மு.காவினுள் எதுவித பிரச்சினைகளும் தோன்றாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.கடந்த சனிக்கிழமை (31-10-2015) அமைச்சர் ஹக்கீம் சாய்ந்தமருதில் இடம்பெற்ற இளைஞர் மா நாட்டில் உரையாற்றிய போது நஸீரின் சுகாதார அமைச்சுக்கான பதவிக் காலம் நிறைவுற்றதும் அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்.இதிலிருந்து மாகாண சபைத் தேர்தலுக்கும் தேசியப்பட்டியலுக்கும் இடையில் ஏதோ தொடர்புள்ளதை அறிந்து கொள்ளச் செய்கிறது.மேலுள்ளவைகளை அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியலை வழங்காமல் இருப்பதற்கான காரணங்களாக கூறலாம்.இன்று அமைச்சர் ஹக்கீம் ஒரு தேசியப்பட்டியலை வைத்துக்கொண்டுள்ள எத்தம் காட்டிக்கொண்டிருக்கும் போதே அதனை மையமாக கொண்டு மு.கா மிகப் பெரும் பிளவுகளை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஹக்கீம் மு.காவிற்கு கிடைத்த தேசியப்பட்டியலை தனது சகோதரரான ஹபீசிற்கும்,சல்மானுக்கும் தற்காலிகமாக வழங்கியிருந்தார்.அமைச்சர் ஹக்கீம் மிக நீண்ட காலத்திற்கு பின்பு தனது சகோதரரான ஹபீசிற்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியலை எடுத்து திருகோணமலை தௌபீக்கின் கையில் ஒப்படைத்தார்.முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலையில் தொடர்ச்சியாக தக்க வைத்து வந்த தனது ஆசனத்தை இம் முறை இழந்துள்ளதோடு இது வரை திருகோணமலையில் ஆசனம் எதுவும் பெறாத அ.இ.ம.கா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலைக்கு தேசியப்பட்டியல் வழங்காது விடுகின்ற போது திருகோணமலையின் மு.காவின் அடித்தளம் அசையக் கூடிய நிலையுமிருந்தது.தனது சகோதரருக்கு தேசியப்பட்டியல் வழங்கிமையானது மு.காவினுள் பாரிய எதிர்ப்பையும் தோற்றுவித்திருந்தது.இவ்வாறான பலவற்றின் விளைவுகளினால் தான் மு.கா திருகோணமலைக்கு தேசியப்பட்டியலை வழங்கியிருந்தார்.

தேசியப்பட்டியல் விவகாரமானது அமைச்சர் ஹக்கீமின் ஆளுமையின் இயலாமையை தெளிவாக புடம் போட்டுக்காட்டுகின்ற ஒன்றாகும்.இப்படி தற்காலிகமாக நியமிக்கும் செயலை இலங்கையில் உள்ள எக் கட்சியும் செய்யாமை அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவ இயலாமை மட்டிட்டுக்கொள்ளச் செய்கிறது.இதற்கு முற்பட்ட காலப்பகுதியில் அமைச்சர் ஹக்கீமிடம் யாருமே வாய் திறந்து பேச முடியாத நிலையே இருந்தது.தற்போது அவர் ஒரு சிறு முடிவு கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளார்.இது அமைச்சர் ஹக்கீமிற்கு மு.காவினுள் உள்ள செல்வாக்கு படிப்படியாக குறைந்து செல்வதை துல்லியமாக்குகின்றது.

தற்காலிக தேசியப்பட்டியல் என்பதற்கு ஒரு குறித்த கால  எல்லை இல்லாத போதும் அது வருடங்கள் கழிந்து செல்வதை யாராலும் உள ரீதியாக ஏற்றுகொள்ள முடியாது.இன்று மு.காவின் தேசியப்படியலை பலரும் குறிவைத்திருப்பதால் அதனை யாருக்கு வழங்கினாலும் மு.காவினுள் சல சலப்புக்கள் ஏற்படும் என்பதை மறுக்க முடியாது.அதற்காக அதனை உரிய நபருக்கு வழங்காமலும் இருக்க முடியாது.இதனை கட்சியின் உயர்பீடத்தினுள் கலந்துரையாடி முடிவெடுக்கும் போது அமைச்சர் ஹக்கீம் தன் தலையை பாதுகாத்துக்கொள்ளலாம்.உயர் பீட உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு போதும் ஒரு முடிவுக்கு வர மாட்டார்கள் என்ற விடயமும் மறு பக்கத்தில் உள்ளது.இதற்கு வாக்கெடுப்பு போன்ற முறைகளையும் பயன்படுத்தலாம்.அமைச்சர் ஹக்கீம் இதனை முடிவுக்கு கொண்டுவர உறுதி பூண்டால் இதனை ஏதாவது ஒரு வழியில் தீர்த்துக்கொள்ளலாம்.தற்போது மு.காவின் தலைமையகமான தாருஸ்ஸலாம் பற்றிய விவகாரமே ஹக்கீமை வீழ்த்தும் முக்கிய ஆயுதமாக சிலரால் பயன்படுத்தப்படுகிறது.தாருஸ்ஸலாம் பற்றிய முக்கிய விடயங்கள் தற்போது தற்காலிக தேசியப்பட்டியல் உறுப்பினராகவுள்ள சல்மான் நன்கு அறிவார்.இந்த நேரத்தில் அவரிடமிருந்து பதவியை பிடுங்கி எடுப்பதும் ஆபத்தானது.சில வேளை அமைச்சர் ஹக்கீம் அவரது வாயை கட்டுவதற்குத் தான் இந்த தேசியப்பட்டியல் பயன்படுத்தப்படுகிறதோ தெரியவில்லை.

அமைச்சர் ஹக்கீம்  தான் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலை வழங்கியே ஆக வேண்டும்.அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படுமாக இருந்தால் அது நஸீரிற்கே வழங்கப்படும்.நஸீரிற்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் போது அவரது மாகாண அமைச்சு திருகோணமலை அன்வர்,அம்பாறை தவம் ஆகியோரில் ஒருவருக்கு செல்வதற்கான வாய்ப்பே அதிகம்.அமைச்சர் ஹக்கீம் கடந்த பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் இத் தேர்தலை தொடர்ந்து அக்கரைப்பற்றிற்கு ஒரு பதவி வழங்கப்படுமென கூறியிருந்தார்.அது இதனை மையமாக கொண்டு மாகாண சுகாதார என்ற பதவிதான் பலரது கணிப்பு.இதன் காரணமாக அவ் அமைச்சு தவத்திற்கு செல்வதற்கான வாய்ப்பே அதிகம்.இதன் போது எழும் மாகாண சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு இறக்காமத்தை சேர்ந்த ஜெமீல் காரியப்பர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.இது மு.காவின் வளர்ச்சிக்கு அபரிதாமான பங்களிப்பை செய்யும்.

அக்கரைப்பற்று மக்கள் நெடுங்காலமாக தாங்கள் பாதுகாத்து வந்த பாராளுமன்ற உறுப்புருமையை கடந்த தேர்தலில் இழந்துள்ளனர்.இதன் காரணமாக அக்கரைப்பற்றில் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் அடித்தளம் சரிந்துவிட்டதென நினைத்தால் அது தவறு.அந்த மக்கள் தாங்கள் அரசியல் அதிகாரமொன்றை இழந்த வெறியில் உள்ளனர்.இதன் போது தவத்திற்கு ஒரு அமைச்சு பதவி வழங்கப்பட்டிருந்தால் தங்களது இழப்பிற்கு அது சிறியதான ஆறுதலை வழங்கியிருக்கும்.அதாவுல்லாஹ் தான் தங்களது அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்ற அவசியமில்லை.மு.காவினாலும் நிரப்ப முடியும் என்ற நம்பிக்கை அந்த மக்களிடையே பிறந்திருக்கும்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் மு.கா தவத்திற்கு மாகாண அமைச்சு கிடைக்கும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருந்ததால் தவத்திற்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாத போது அந்த மக்கள் மு.காவை சலித்துக்கொள்வர்.அக்கரைப்பற்று மக்கள் மு.காவின் பின்னால் அணி திரளச் செய்யக் கூடிய சாதக நிலையை மு.கா பயன்படுத்த தவறுகிறது.

இது போன்று தான் இறக்காமத்து மக்கள் தங்களது ஊரிற்கு ஒரு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கமாட்டாதா என ஏங்கிக்கிடக்கின்றனர்.இந்த சந்தர்ப்பத்தில் இறக்காமத்திற்கு ஒரு மாகாண சபை பிரதிநித்துவம் வழங்கப்படுமாக இருந்தால் அந்த மக்களுக்கு மு.காவினால் கிடைத்த மிகப் பெரும் வரப் பிரதாசமாக இருக்கும்.தற்போது ஜெமீல் காரியப்பருக்கு அமைச்சர் ஹக்கீமின் பணிப்பின் பேரில் சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பதவியை வழங்கி அடக்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவை இரண்டும் மிக விரைவில் வரலாமென எதிர்பார்க்கப்படும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மு.காவின் வளர்ச்சிக்கு அபரிதமான பங்களிப்புச் செய்யும்.இங்கு நான் இதனை கூறுவதற்கான காரணம் மு.கா வழங்காமல் வைத்துள்ள தேசியப்பட்டியலை வழங்குவதானது மு.காவின் வெற்றிற்கு அபரிதமான பங்களிப்பு செய்யும் என்ற நிலை உள்ள போதும் அதனை வழங்காமல் வைத்திருப்பது மு.காவின் வளர்ச்சிக்கு செய்யும் துரோகமாகும்.அத்தோடு இதனால் இறக்காமம்,அக்கரைப்பற்று மக்கள் மறைமுகமாக புறக்கணிக்கப்படுகின்றனர்.

இன்று இலங்கை பாராளுமன்றமானது அரசியலமைப்பு மாற்ற முயற்சி போன்ற மிக முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தியுள்ளது.இச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவை அதிகம் உணரப்படுகிறது.இந்த நேரத்தில் தற்காலிக தேசியபட்டியல் உறுப்பினர் அந்த இடத்திற்கு ஒரு போதும் தகுதியானவரல்ல.இதன் போது சல்மான் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர் தனது செயற்பாடுகளை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அமைத்துக்கொள்வதால் எதுவித பாதிப்புமில்லை என்ற நியாயமொன்றுமுள்ளது.ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இத்தனை வருடங்கள் உறுப்பினராக இருப்பார் என்பது வரையறுக்கப்பட்டிருக்கும்.சில வேளை சில காரணங்களால் இந்த கால எல்லையில் மாற்றம் வரலாம்.இப்படியான கால எல்லை வரையறுப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்று தான் தனது திட்டங்களை குறித்த கால எல்லைக்குள் வகுத்துக்கொள்வதற்காகும்.உதாரணமாக ஒரு அபிவிருத்தி திட்டம் எனும் போது அத் திட்டத்தை இக் கால எல்லைக்குள் ஒரு குறித்த இலக்கை அடையும் போது தனது பதவிக் காலத்தினும் பூரணமாக நிறைவு செய்யலாம் என்ற திட்டமிட்டமிருக்கும்.இவ்வாறான நீண்ட கால திட்டங்களை எப்போது தான் இராஜினாமா செய்ய வேண்டுமென தெரிதாதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் சல்மானால் தீட்ட முடியாது.இதுவெல்லாம் அமைச்சர் ஹக்கீம் தற்காலிகமாக தேசியப்பட்டியலை வழங்கியதிலுள்ள பாதிப்புக்களாகும்.

இன்று மு.காவின் தற்காலிக தேசியப்பட்டியல் உறுப்பினராகவுள்ள சல்மான் இலங்கை முஸ்லிம்களுக்கு தேவையான அபிவிருத்தி விடயங்களில் சிறிதும் கவனம் செலுத்தியதாக அறியக்கிடைக்கவில்லை.ஒரு குறித்த நிகழ்விற்கு இவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதிதியாக அழைத்ததைக் கூட காணக்கிடைக்கவில்லை.இருந்தாலும் முஸ்லிம்கள் சம்மதமான ஹஜ் சட்டம் போன்ற சில முக்கிய விடயங்களில் பாராளுமன்றத்தில் இவரது செயற்பாடுகள் பாராட்டத்தக்கது.இன்று தேசியப்பட்டியல் வழங்க சிந்திக்கப்படுபவர்கள் யாருமே இப்படியே விடயங்களில் வாய் திறப்பார்களா என்று உறுதியாக கூற முடியாது.

அண்மைக்காலமாக அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியல் தொடர்பில் எங்கும் கதைத்ததாக அறிய முடியவில்லை.ஆரம்பத்தில் மு.கா ஆதரவாளர்களிடையே தேசியப்பட்டியலை இவருக்குத் தான் வழங்க வேண்டும் என்ற  தர்க்க ரீதியான வாதங்களை அவதானிக்க முடிந்தது.தற்போது அமைச்சர் ஹக்கீம் இதனை வழங்காததன் காரணமாக எழுகின்ற விமர்சனங்களால் மு.காவின் தீவிர ஆதரவாளர்கள் தேசியப்பட்டியலை யாருக்காவது தங்களது தலைவர் வழங்கட்டும் என்ற மனோ நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.சில வேளை இந்த மனோ நிலை வரும் வரை மு.காவின் தலைவர் காத்துக்கொண்டிருக்கலாம்.இவ்விடயத்தில் அமைச்சர் ஹக்கீமின் கால நீடிப்பை பார்க்கும் போது தற்காலிக தேசியப்பட்டியல் என்று கூறியே சல்மானை பூரணமாக பாராளுமன்ற உறுப்பினராக வைத்திருக்க போகிறாரோ தெரியவில்லை.

அமைச்சர் ஹக்கீம் சல்மானை தேசியப்பட்டியல் உறுப்பினராக பூரணமாக வைத்திருக்க விரும்பினால் அவரை பகிரங்கமாக பொருத்தமான உறுப்பினர் என அறிவிக்கலாம்.சல்மானை தேசியப்பட்டியல் உறுப்பினராக அறிவித்தால் அதன் மூலம் எழத் தக்க பாதிப்புக்களை அமைச்சர் ஹக்கீம் அவ்வளவு இலகுவில் சமாளித்துக்கொள்ள மாட்டார்.

அமைச்சர் ஹக்கீம் சுழற்சி முறையில் தேசியப்பட்டியலை வழங்க சிந்திப்பதாகவும் அறியக்கிடைத்தது.அவ்வாறு இருந்தாலும் சல்மானுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் மூலம் மிக நீண்ட காலம் பாழாகிவிட்டது.மிக விரைவில் மாகாண மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் இந்த தேர்தலுக்கு முன்பு இவற்றை  வழங்காமல் போனால் ஹக்கீமை இதனை வைத்தே இகழ்ந்து தள்ளிவிடுவார்கள்.ஹக்கீமின் தேசியப்பட்டியல் மந்திர முடிச்சால் சிலர் ஹக்கீமிற்கு எழும் சவால்களை முண்டியடித்துக் கொண்டு எதிர் கொள்ள வருகிறார்கள்.இவ்வாறான மந்திர முடிச்சு தேசியப்பட்டியல் வழங்கப்படும் போது அவிழ்ந்துவிடும்.

 

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *