உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது விஜயத்தை இரத்து செய்து விட்டு இன்று மாலை நாடு திரும்பினார்.
வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, வசட்டுவ, மீகொட கொலன்னாவ, வென்னவத்த, புத்கம, களனிபுர பிரதேசங்களுக்கும் அமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட அகதிகளின் அவல நிலைகளை அறிந்து கொண்டார்.
வெல்லம்பிட்டி சந்தியிலிருந்து கடற்படையின் படகொன்றின் மூலம் மீகொட கொலன்னாவ, வென்னவத்த, கொடிகாவத்த, புத்கம, களனிபுர, ஆகிய பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட்டார்.
இந்தப்பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாத நிலையில் வீடுகளில் தங்கியிருக்கும் சுமார் 3500 பேரை பாதுகாப்பாக வெளியே எடுப்பது தொடர்பிலும் அமைச்சர் கவனம் செலுத்தினார்.
நிவாரணப்பணியார்களுக்கு தமது நன்றிகளை வெளிப்படுத்திய அமைச்சர், மேற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டியவர்களின் விபரங்களை உடன் தந்துதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.
நிலமை சீரடைந்து மக்கள் மீண்டும் இயல்பு வாழ்வை தொடங்கும் வரை இந்த மக்களுக்கு சமைத்த உணவுகள், உலர் உணவுகள் வழங்குவது தொடர்பிலும் கூடாரங்களில் இந்த மக்களை இருத்துவது தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.