சவூதி அரேபிய அரசு இலங்கை முஸ்லிம்களுக்கு ரமழான் அன்பளிப்பாக வழங்கியுள்ள 200 தொன் பேரீச்சம் பழமும் எதிர்வரும் ரமழான் மாதத்துக்கு முன்பு நாடெங்கிலும் உள்ள பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் ஊடாக மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என முஸ்லிம் சமய மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
இதற்கான சகல நடவடிக்கைகளையும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொள்ளும்.
பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு திணைக்களம் பேரீச்சம் பழங்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்யும். விரும்பும் நிர்வாகங்கள் நேரில் வந்தும் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அமைச்சர் கூறினார்.
நேற்றுக்காலை முஸ்லிம் சமய மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் காரியாலயத்தில் சவூதி அரேபிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் பேரீச்சம்பழம் முஸ்லிம் சமய மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள சவூதி அரேபியா தூதுவராலயத்தின் இரண்டாவது அதிகாரி (charge de affairs) மொஹமட் அல்லாப் பேரீச்சம் பழத் தொகையை அமைச்சர் ஹலீமிடம் கையளித்தார்.
இந்த பேரீச்சம்பழத்தொகையை ஆவணங்களில் கையொப்பமிட்டு அமைச்சர் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வினையடுத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே அமைச்சர் ஹலீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த வருடம் சவூதி அரேபியா அரசு இலங்கைக்கு 250 தொன் பேரீச்சம்பழம் அன்பளிப்புச் செய்திருந்தது. இவ்வருடம் 200 தொன்னே வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை உடனடியாக பள்ளிவாசல்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
முஸ்லிம் சமய விவகார அமைச்சு ஈரான், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளிடமும் தூதுவராலயங்களூடாக பேரீச்சம்பழம் கோரியுள்ளது. இந்நாடுகளும் ரமழான் மாதத்துக்கு முன்பு பேரீச்சம்பழம் அன்பளிப்புச் செய்தால் இலங்கை முஸ்லிம்களின் ரமழான் மாத தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்குமிடையில் நீண்டகாலமாக உறவு இருந்து வருகிறது. ரமழான் காலத்தில் சவூதி அரேபியா பேரீச்சம்பழம் அன்பளிப்புச் செய்துவருவதுடன் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கும் உதவி வருகிறது.
நாம் சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் சவூதி மக்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.
மன்னர் சல்மானின் நலன்புரி அமைப்பின் பிரதிநிதி ஹமட் அல்பஸ்லி தனதுரையில் இலங்கை முஸ்லிம்களுக்கு பேரீச்சம் பழம் அன்பளிப்பு செய்வதில் தாம் பெரும் மகிழ்வெய்வதாகவும், எமது உறவுகள் மேலும் பலமடைவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்வில் சவூதி அரசின் நிதியமைச்சின் பிரதிநிதிகள் அப்துல் அஸீஸ் அல்திரீஸ் அப்துல் மலிக் அல்ஹசன் ஆகியோரும் மன்னர் சல்மான் நலன்புரி அமைப்பின் சார்பில் ஹமட் அல்பஸ்லி, மொபரெஹ் அல்கம்தியும் கலந்து கொண்டனர்.
மேலும் முஸ்லிம் சமய தபால் சேவைகள் பிரதியமைச்சர் துலீப் விஜேசேகர, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச். எம்.ஸமீல், அமைச்சின் செயலாளர், அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் எம்.எச்.எம்.பாஹிம், வக்பு சபைத்தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாசீன், உறுப்பினர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.