Breaking
Sun. Nov 24th, 2024

நூருல் ஹுதா உமர்

அமைச்சர் பதவி கிடைத்தால் அந்த பிரதேச மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால் இங்கு அந்த தினம் துக்க தினமாக இருக்கிறது. அரசியல் சூறாவளியில் பெரிய பெரிய அரசியல் திமிங்கிலங்கள் மொட்டு கடலிலிருந்து வெளியிறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் எங்கள் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பேத்தை போன்று மொட்டில் ஒட்டிக்கொண்டிருக்கிறார். அவரது பொய்யான மாயையை மக்கள் இனியும் நம்ப தயாரில்லை. பொத்துவில் மக்கள் உட்பட அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்காலத்தில் தக்க பாடத்தை முஷாரபிற்கு கற்பிற்க தயாராக உள்ளார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

இன்று (28) மாலை பொத்துவில் தனியார் விடுதியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிரியர் ஏ.எம்.எம். தாஜுதீன், என்.எச்.முனாஸ் மக்கள் காங்கிரசின் வட்டார அமைப்பாளர்களான ஏ.எல். மனாப், அலாவுதீன் அப்துல்லாஹ் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்கள்

அம்பாறை மாவட்ட சகல பிரதேசங்களினதும் மக்களின் ஒத்துழைப்புடன் பொத்துவில் மக்களின் கணிசமான ஆதரவுடன் மண்ணின் தாகத்தை தீர்க்க உருவாக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்புரிமையானது இன்று வாக்களித்த மக்களுக்கு தலைகுனிவை உண்டாக்கும் விதமாக நடந்து கொள்கிறது. நாட்டினதும், நாட்டு மக்களினதும் அபிலாசைகளை மறந்து தன்னுடைய சொந்த தேவைகளுக்கு முன்னுரிமையளித்து சுயநல போக்குடன் எங்கள் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் செயற்படுகிறார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகித்த இந்த இரண்டு வருடங்களில் எமது நாட்டுக்கோ, மாவட்டத்திற்கோ அல்லது பொத்துவில் பிரதேசத்திற்கோ எந்தவித சேவைகளையும் பெறவுமில்லை. உரிமைகளை பெற்றுத்தரவுமில்லை. 2022 ஆண்டின் சிறந்த பொய் மூட்டையாகவும், வெற்றுப்போத்தலாகவுமே அவர் அரசியலில் உலாவருகிறார். சமூக வலைத்தளங்களில் மட்டும் நிறைய பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கும் அவர் மக்கள் காங்கிரஸ் சார்பில் பொத்துவிலுக்கு செய்திருக்கும் ஒரு நல்ல விடயம் என்ன ? பல ஆயிரம் காணி விடுவிப்பு தொடர்பிலும், பொத்துவில் கல்வி வலய உருவாக்கம் தொடர்பிலும், முகுதுமலை விடயம் தொடர்பிலும், பொத்துவிலுக்கான ஒசுசல தொடர்பிலும் இன்னும் பல விடயங்கள் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் மட்டுமே படம் காட்டிக்கொண்டிருக்கிறார் விடயங்கள் எதுவும் நடக்கவில்லை.

113 ஆதரவை பெற அரசு தடுமாறிக்கொண்டிருக்கும் இந்த அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி பொத்துவிலுக்கும், அவருக்கு வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களுக்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் நிறைய விடயங்களை சாதித்திருக்க முடியும் ஆனால் அவர் சுகபோகங்களை மட்டுமே பெற்றுக்கொண்டிருக்கிறார். அவரின் இராஜாங்க அமைச்சுப்பதவி மரணிக்கும் தருவாயில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. காணிப்பிரச்சினைகள், கல்விவலய உருவாக்கம் போன்ற பொத்துவில் மக்கள் அவரை பாராளுமன்றம் அனுப்பிய பிரச்சினைகளை தீர்க்க கிடைத்த சரியான வாய்ப்பையும் அவர் சுயநலத்திற்காக தவறவிட்டுள்ளார். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்டியலில் சேர்த்த பணம் முதல் செருப்பு வாங்க வைத்திருந்த பணம் வரை கொடுத்து அரசியல் செய்தது இவர் சுகபோகம் அனுபவிக்கவா? கோடிக்கணக்கான கடனுடன் அரசியலுக்கு வந்தவர் தனது கடன்களை அடைத்து கொள்வதற்காகவும் இன்று சுகபோகங்களுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் பலிகொடுத்துள்ளார்.

அவரது பாணியில் நாங்கள் கேட்பதாக இருந்தால் அவர் இப்போது மொட்டா அல்லது மயிலா என்றுதான் கேட்க வேண்டும். அன்று கூடாது என்ற மொட்டு இன்று எப்படி கூடுமானது? மாணிக்க கல் விற்று யாரும் கடன்காரனாக வில்லை. அவர் சிங்கப்பூர், கோலாலம்பூர் போன்ற வெளிநாடுகளில் என்ன விளையாடினார். எதனால் கடன்காரனானார் என்பதெல்லாம் எங்களுக்கு ஆதாரத்துடன் வெளிப்படுத்த முடியும். தொழிலொன்றுமில்லாது இருந்தவரை இறக்கத்துடன் நோக்கிய மக்கள் காங்கிரஸ் தலைவர் அவருக்கு சகல சொகுசுகளையும் வழங்கி கௌரவப்படுத்தினார். அது போன்றே பொத்துவில் மண்ணையும் கௌரவப்படுத்தி 50 வீட்டுத்திட்டம், கல்வி, பள்ளிவாசல்கள் என எல்லாத்துறைகளுக்கும் நிறைய உதவிகள் செய்துள்ளார்.

இப்படியான தலைவரை சத்தியம் செய்ய அழைக்கும் முஷாரப் அவர்கள் சத்தியமிடுவது எப்படி என்பதை எல்லோரும் அறிவர். அவர் செய்த சத்தியங்கள் இன்றும் மக்கள் மத்தியில் இருக்கிறது. முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித்தை வீழ்த்தி புதிய தவிசாளராக நியமிப்பேன் என்று வழங்கிய வாக்குறுதிகளும் சத்தியமும் இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. பொத்துவில் மக்களுக்கு தேவைகளின் போது உதவிய நிந்தவூர் தவிசாளரை கூட அவமதித்து நடந்தவரே இவர். இப்படியான துரோகியை கட்சியை விட்டு அடியோடு விலக்க வேண்டும். என்றனர். இந்த ஊடக. சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *