சர்வதேச நாணய நிதியத்துடன் முரண்படுவதாக உள்ளுார் அரசியலில் அரசாங்கம் காட்டிக்கொண்டாலும், அந்த நிதியத்தின் உதவிகளை உதறித்தள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்திடம், உதவி பெறுவதே சிறந்தது என்று எதிர்க்கட்சிகளும், பொருளாதாரத்துறையினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப்போவதில்லை என்று நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருகிறது.
இதற்கான உரிய காரணங்களை அரசாங்கம், தெரிவிக்காத போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவிகளின்போது தரகு பணம் கிடைக்காது என்பதற்காகவே அரசாங்கம் அந்த உதவியை புறந்தள்ளுகிறது என்று எதிர்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
இந்தநிலையில் பொருளாதார நிலையை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தவிர்க்கமுடியாத அரசாங்கம், உள்ளுார் அரசியலில் எதிர்கட்சியின் நிலைப்பாடுகளையும் சமப்படுத்திக்கொண்டு, அதன் உதவியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதன் ஒரு கட்டமாக, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் இலங்கை தொடர்பான நான்காம் கட்ட அறிக்கையை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அடுத்த வார அமைச்சரவையில் சமர்ப்பித்து விளக்கமளிப்பார் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
எனினும் மேலதிக தகவல்கள் எதனையும் அவர் தெரிவிக்கவில்லை.
இதேவேளை மத்திய வங்கியின் வெளிநாட்டு இருப்பு 2.36 பில்லியன் டொலர்களாக இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட பற்றாக்குறை நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.