நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் நாளைய தினம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஏழு அரச வங்கிகளின் ஊழியர்கள் சேவையில் இருந்து விலகி இருக்கும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிப்பார்கள் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவது சம்பந்தமான இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படவுள்ளது.
மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஏழு அரச வங்களின் முகாமைத்துவங்களுக்கும், தொழிற்சங்கத்திற்கும் இடையில் கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும். இந்த வருடத்தில் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கடந்த மார்ச் மாதம் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது.
எனினும் இதுவரை உடன்படிக்கை கைச்சாத்திடப்படவில்லை. இது சம்பந்தமாக நிதியமைச்சருக்கு தெளிவுப்படுத்தியதை அடுத்து நாளைய தினம் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், 22 ஆம் திகதி ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும். இதன் பின்னர் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு நடத்தப்படவுள்ளதுடன் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது பற்றியும் திட்டமிடப்பட்டுள்ளது என அரச வங்கி ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.