Breaking
Fri. Apr 26th, 2024

-ஏ.எச். சித்தீக் காரியப்பர்

‘மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள் முஷாரப்.. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள். யார் குற்றினாலும் நெல் அரிசியானால் சரியே! என அண்மையில் எனது முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தேன்.

இந்தப் பதிவு தொடர்பில் பல பின்னோட்டங்கள் பலராலும் தொடர்ந்தும் பதிவு செய்யப்படுகின்றன. அதிகமான பதிவுகள் ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொள்வதாகவும் முரண்பட்டு சவால் விடுப்பதாகவுமே உள்ளன. இது ஆராக்கியமான செயல் அல்ல. கருத்தை கருத்தால் வெல்வதே சிறப்பு.

கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களும் கௌரவ முஷராப் அவர்களும் சிலவேளைகளில் சமாதானமாகி ஐக்கியப்பட்டாலும் எனது பதிவு தொடர்பில் கருத்து வெளியிடுவோர் பரம எதிரிகளாகவே இருப்பார்களோ என்ற அச்சம் எனக்குள் எழுந்துள்ளது.

அரசியல்வாதிகளுக்காக நாம் அடிபிடிபடத் தேவையில்லை. அதன் பாதிப்புகள் அரசியல்வாதிகளை அல்ல எம்மையே எதிர்கொள்ளச் செய்யும் என்பதே நடைமுறை யதார்த்தம்.

கௌரவ முஷராப் அவர்கள் அரசுக்கு ஆதரவு வழங்குவது என்பது இன்றைய நிலையில் சரியே.. ஆனால் அவர் அவரது கட்சியின் கட்டுக்கோப்பை மீறியிருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் என்னிடம் மாற்றுக் கருத்து இல்லை.

இருப்பினும் இந்த விடயத்தை கட்சி உயர்பீடமும் நீதிமன்றமும் பார்த்துக் கொள்ளட்டும். நாம் தலையிடத் தேவையில்லை. நமக்குள் முரண்படவும் தேவையில்லை. எனவே, இந்த விவகாரத்துக்குள்ளிருந்து நாம் விடுபடுவதே நல்லது.

இனி விடயத்துக்கு வருவோம்…. கௌரவ முஷராப் அவர்கள் அம்பாறை மாவட்டத்தை பிரிதிநித்துவப்படுத்தும் ஓர் எம்பியானாலும் பொத்துவிலுக்கே அவர் அதிக சேவைகளைச் செய்ய வேண்டியவாராக உள்ளார். அதற்கான காரணங்களை இங்கு கூறலாம். பொத்துவில் என்பது அபிவிருத்தியில் பின்தங்கிய ஒரு பிரதேசம். பொத்துவில் என்பது அரசியல்வாதிகளால் தீண்டத்தகாத ஒரு பிரதேசம் என பொத்துவிலை இரு வகைப்படுத்தலாம். பொத்துவில் மக்களின் வாக்குகளை பெற்றுவிட்டு பின்னர் அந்த வாசலுக்கே செல்லாத அரசியல்வாதிகள்தான் அம்பாறை மாவட்டத்தில் உள்ளனர்.

அதாவது, பொத்துவில் பிரதேச மக்கள் வெறும் கறிவேப்பிலையாகவே இன்றுவரை அரசியல்வாதிகளால் கையாளப்படுகிறார்கள். அந்த மக்களின், அந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.

எனக்குத் தெரிந்த வகையில் கனரத்தினம் முதல் எஸ்எஸ்பி மஜீத் வரையானோரின் செயற்பாடுகளையும் நான் நன்கறிவேன்.

இவ்வாறான ஒரு நிலையில்தான் அந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் கௌரவ முஷாரப் அவர்கள் இப்போது எம்பியாகி உள்ளார். தனது ஊர் மக்களின் வலிகளை உணர்ந்தவர், அவர்களின் தேவைகளை அறிந்தவர். இவற்றை விடவும் அவர் ஓர் இளைஞர்.

எனவே, அவர் தன்னைப் பெற்ற மண்ணுக்கு தன்னால் முடிந்தவற்றையே செய்யவே முயற்சிக்கிறார். அதற்காக அங்கும் இங்கும் என்று ஓடித்திரிவதனையும் நான் அறிவேன்.

இவ்வாறான நிலையில் நாம் அவரை அரசியல் ரீதியில் இலக்கு வைத்து வெறுமனே விமர்சிக்காது, கௌரவ ரிஷாத் பதியுதீனுக்கு துரோகம் செய்தவர், கட்சி மாறியவர் என்றெல்லாம் நோக்காது அவரை அவரது சேவைகளின், முயற்சிகளின் அடிப்படையில் உற்சாகப்படுத்துவதே இன்றைய நிலையில் சிறப்பு.

இற்றைவரை எந்த அரசியல்வாதியும் பொத்துவில் தொடர்பில் சிந்திக்காத நிலையில், கௌரவ முஷராப் அவர்கள் அந்த மண்ணுக்காக செயற்படுவதில் என்ன பிழை உள்ளது? இந்த விடயத்தில் வைக்கோல் பட்டறை நாய்களாக நாம் யாரும் இந்த விடயத்தில் இருந்து விடக்கூடாது.

காற்றுள்ளபோதே நல்ல விடயங்களை அவர் தூற்றிக் கொள்ள முயற்சிக்கும் இன்றைய நிலையில், இவ்வாறான நமக்குத் தேவையில்லாத விமர்சனங்களை அவர் தொடர்பில் முன்வைக்காமல் இருப்பதே சிறப்பு. தேவையற்ற விமர்சனங்களை அவர்மீது முன்வைப்பதால் அவரது வேகத்துக்கும் விவேகத்துக்கும் உளவியல் ரீதியான பாதிப்புகளை அவை ஏற்படுத்துமல்லவா? அதன் எதிரொலி பொத்துவிலையும் மேலும் பாதிக்கச் செய்யவும் கூடும்தானே? (நானும் அவர் தொடர்பில் சில விமர்சனங்களை வெளியிட்டவன் என்பதனை இங்கு வெளிப்படையாக தெரிவித்துக் கொள்கிறேன்)

கௌரவ முஷாரப் குற்றுவது அரிசியாகுமா அல்லது நெல்லாகவே இருக்குமா என்ற விமர்சனங்கள், எதிர்வு கூறல்களும் தவிர்க்கப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் இன்னொரு பொதுத் தேர்தல் வரும்போது அதனை அவரது ஊர் மற்றும் மாவட்ட மக்கள் பார்த்துக் கொள்வார்கள்தானே? இப்போது மக்கள் மடையர்கள் அல்லர். வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான் என்ற பழமொழியை செயற்படுத்தும் சக்தியாக மக்கள் மாறி தமது வாக்குப் பலத்தின் ஊடாக அவரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைப்பார்கள் என்பது நிச்சயம்.

எனவே, அவரது தாய் மண்ணின் அபிவிருத்தி தொடர்பில் அவர் முன்னெடுக்கும் செயற்பாடுகளை அரசியல் ரீதியில் நோக்காது திரிகரணசுத்தியுடன் நோக்கி அவரை உற்சாகப்படுத்தி அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்கள் போன்று பொத்துவில் மண்ணின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கி பெருமை கொள்வோமாக!

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *