மன்னார் மாவட்டத்திலுள்ள சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வீட்டுத் தோட்டங்கள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மன்னார் சமுர்த்தி பணிப்பாளர் ஐ.அலியார் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வறுமை ஒழிப்பு திட்டத்தில் நாட்டிலுள்ள சகல பிரதேசங்களிலும் வீட்டுத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்பொழுது உள்ள நிலையில் மக்கள் தங்களுக்கான உணவுப் பொருட்களை தங்கள் வீடுகளிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளாகவே இவ் வீட்டுத்தோட்ட செயல்பாடு அபிவிருத்தி செய்யப்படுகின்றது.
இந்தவகையில் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் திகதியிலிருந்து நாடு பூராகவும் ‘சமுர்த்தி செளபாக்கியா’ வீட்டுத்தோட்டம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத் திட்டத்துக்கு அமைவாக சமுர்த்தியில் நன்மை பெறுகின்ற குடும்பங்கள் மற்றும் வீட்டுத் தோட்டம் செய்ய ஆர்வம் கொண்டவர்கள் அவர்களுக்கு வீட்டுத் தோட்டத்துக்குத் தேவையான மரக்கறி கன்றுகள், விதைகள் மற்றும் பழமரக்கன்றுகள் போன்றவைகள் வழங்கி மன்னாரில் வீட்டுத்தோட்டங்கள் செய்வதற்கான சகல முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.