இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழல் இல்லாது போகும் நிலை உருவாகி வரும் இந்தச் சந்தர்ப்பத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் முன்னிற்கும்.
துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் நீதி கிடைக்க ஐக்கிய மக்கள் சக்தி இறுதிவரைப் பாடுபடும் என அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கம்பஹா மாவட்ட சமூக ஊடக ஆர்வலர்கள் எதிர்க்கட்சித் தலைவரை நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இந்த அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம் என்பன அதிகரித்துள்ளன.
பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோத்திலும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகத்திலும் யார் ஈடுபட்டாலும் அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இன, மத, மொழி, பதவி நிலை கடந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை.
இந்த நாட்டில் தாய்மார்களுக்காகவும் சிறுவர்களுக்காகவும் நாம் எப்போதும் துணை நிற்போம். சகலருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும். எனினும், தற்போது நாட்டில் நீதியானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் கிடைக்கின்றது” – என்றார்.