Breaking
Sat. Nov 23rd, 2024

வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸின் தலைமையில், நகர அபிவிருத்தி மூலோபாயதிட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், நேற்று முன்தினம் (22) ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் SCDP மூலம் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை, உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டிய புதியதிட்டங்கள் மற்றும் செம்மணி நிலப்பகுதியில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், செம்மணி நிலப்பகுதி தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஆளுநர் குறித்த நிலப்பகுதி அரசாங்கத்திற்கு உரித்துடைய பகுதியாகும். அது உள்ளூராட்சி திணைக்களங்களுக்குரியதா அல்லது மத்திய அரசின் செயற்பாடுகளின் கீழ் உள்ளதா என ஆராய்ந்து மேலதிக செயற்பாடுகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

மேலும், இந்நிலப்பகுதியில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்து, தொடர்ந்து விரும்பிய முதலீட்டாளர்களின் (Proposal) முன்மொழிவுகளைப் பெற்று, அவ் முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பின் உரிய(Condition) களுடன் குறித்த நிலப்பகுதியில் முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமெனவும் தெரிவித்தார். இவ் ஆரம்பகட்ட செயற்பாடுகளுக்காக 6.8 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலதிகமாக குறித்த அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் கட்டாக்காலி மாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஆளுநர் கொவிட் -19 தொற்றிடர் அபாய நிலையை விட கட்டாக்காலி விலங்குகளால் அன்றாடம் ஏற்படும் வீதிவிபத்துக்கள் அதிகரித்து செல்வதாக தெரிவித்தார். எனவே இது தொடர்பில் உள்ளூராட்சி திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பொலிசார் இணைந்து ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தேவையான பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள ஆளுநரால் வலியுறுத்தப்பட்டது.

மேலும் கட்டாக்காலி நாய்கள் வீதிகளிலும், மக்கள் குடியிருப்புகளிலும் பல்வேறு அசௌகரியங்களை மக்களுக்கு ஏற்படுத்துவதாக ஊடகங்களில் சுட்டிக் காட்டப்பட்டதாகவும் அச்செய்தி உண்மையானதா அல்லது பொய்யானதா என்பது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லையென தெரிவித்த ஆளுநர், குறிப்பாக நல்லூர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் மற்றும் இயக்கச்சிப் பகுதியில் உள்ள சில இடங்களில் இவ்வாறான அசௌகரியங்கள் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டினார். எனவே இது தொடர்பில் உரிய பிரதேசசெயலாளர் மற்றும் உள்ளூராட்சி திணைக்களத்தின் தொடர்புடைய தரப்பினர் அப்பிரதேசங்களிற்கு நேரடியாக சென்று நிலமையினை ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தினார்.

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *