Breaking
Sun. May 5th, 2024

(ஜெம்சித் (ஏ) றகுமான்)

அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் வாக்குகளால் அமைச்சுப் பதவி வகிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரசின் தலைவர் ரவுப் ஹக்கீம்  அந்த மக்களை அடிமைச் சாசனம் எழுதி ஆள நினைப்பதும்,வாக்குறுதிகளினால் ஏமாற்ற நினைப்பதையும் கொண்டு அவரின் தலைமைத்துவ ஆளுமையை இலகுவாக கணித்துக் கொள்ள முடியும்.

அண்மையில் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் ரவுப் ஹக்கீம் பிரம்புகளால் அடித்து விரட்டப்பட வேண்டியவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரசிற்குள் உள்ளனர்.எனும் தொனியில் உரையாற்றி இருந்தார்.மு.கா கட்சியில் அதிகமான அங்கத்துவங்களை அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளே கொண்டிருக்கின்றனர்.அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கருத்தின் பிரகாரம் பிரம்புகளால் அடித்து விரட்டப்பட வேண்டியர்கள் என குறிப்பிட்டு பேசியிருப்பது அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளையே என புரியாத சில அரசியல்வாதிகளும்,போராளிகளும் கரகோஷங்களை எழுப்பி,புன்னைக்கத்திருக்கின்றனர் என்றால் இவர்களை போன்ற அறிவிலிகள் யார்?இருக்க முடியும் என்று கேள்வி எழுப்ப தோன்றுகின்றது.

அம்பாறை மாவட்டம் மு.கா வின் இதயமாகும்.அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் புறக்கணித்தால் மு.கா கட்சி அழிந்து விடும் எனும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் மாவட்டமாகும்.இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு வந்து  அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளை, மக்களை அதட்டி பேசும் அளவிற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் அபிலாஷைகளையும்,கரையோர மாவட்ட கனவையும் நிறைவேற்றி விட்டாரா?என அம்பாறை மாவட்ட மக்களால் அவரிடம் வினாவை தொடுக்க முடியும்.

சாதனைகள் புரிந்த தலைவராக அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவ்வாறு பேசி இருந்தால் வாய் மூடி மெளனியாக கேட்டுக் கொண்டிருப்போம்.மாறாக மழைக்கு முளைக்கும் காளான்களை போல் பருவகாலங்களிற்கு வந்து செல்லும் ஒருவரினால் அம்பாறை மாவட்ட மக்களை அதட்டி பேசும் போது கண்டும் காணாததைப் போல் நடந்து கொள்ள அம்பாறை மாவட்ட மக்கள் அமைச்சர் ரவுப் ஹக்கீமிற்கு கொத்தடிமைகள் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில வங்குரோத்து அரசியல்வாதிகள் அக் கருத்தோடு உடன்பட்டு ஆமா சாமி போட்டு சம்மதித்தாலும் அம்பாறை மாவட்ட மக்கள் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டார்கள்.அரவணைக்க தெரிந்த அம்பாறை மாவட்ட மக்களிற்கு தூக்கி வீசவும் தெரியும் என்பதையும் உணர்ந்து அமைச்சர் ரவுப் ஹக்கீம் பேச கடமைப்பட்டவராக இருக்கிறார்.

மறைந்த மாபெரும் அரசியல் தலைவர் மர்ஷூம் அஷ்ரப் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசியலை கற்றுக் கொடுத்திருக்கிறார்.மறைந்த தலைவர் ஒரு நாளும் அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளை பிரம்பு எடுத்து விரட்ட நினைத்ததில்லை.மாறாக அடிமட்ட தொண்டனாலும் அன்பு செலுத்தி அரவணைத்து கொண்டார்.காரணம் மு.கா வை வளர்த்தெடுக்க பட்ட துன்ப,துயரங்கள்,உயிர் இழப்புகளை பக்கத்தில் இருந்து அனுபவித்ததினாலாகும்.துயரத்திற்கு மத்தியில் வளர்க்கப்பட்ட கட்சியே மு.கா அதன் ஆரம்ப போராளிகளை பிரம்புகளால் வெளியேற்றும் அளவிற்கு அமைச்சர் ரவுப் ஹக்கீமிற்கு உரிமையில்லை.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களை நினைத்து கவலையடைய மட்டுமே முடிகிறது.காரணம் இன்று அரசியல் மாய வலைகளுக்குள் சிக்கி பல துண்டுகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள்ளயே மோதிக் கொள்கின்றனர்.இதனை சில அரசியல்வாதிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதை போன்று சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.படித்த சமுதாயம் முதல் அரசியல் முதிர்ச்சிகள் வரை இதை புரிந்து கொள்வதுமில்லை,புரிந்து கொள்ள நினைப்பதும் இல்லை.

அம்பாறை மாவட்ட மக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ள அதனை சாதகமாக்கி அரசியல் முன்னெடுப்புகளை மேற் கொண்டு சில அரசியல்வாதிகள் சொகுசு வாழ்க்கையை வாழ்கின்றனர்.அதற்கான வழிகளை தாங்களே திறந்து விட்டிருப்பதை மக்கள் ஒரு போதும் சிந்திப்பதில்லை.

முஸ்லிம்களின் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால் முதலில் மக்கள் ஒற்றுமை பட வேண்டும்.உணர்வு அரசியலை விட்டு சிந்தனை அரசியலுக்கு வர வேண்டும்.மக்கள் பிரிந்திருக்கும் வரை அரசியல் அபிலாஷைகளை ஒருபோதும் வென்றெடுக்க முடியாது.ஏமாற்று அரசியல் தலைவர்களை புறக்கணிக்க அம்பாறை மாவட்ட மக்கள் ஒன்றினைய வேண்டும்.

முஸ்லிம்களுக்கு என்று பொதுவான கொள்கைகளை ஒன்றினைந்து எமக்குள்ளே பிரகடனப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொள்கைகள் சரியாக வகுக்கப்படுகின்ற போது அதற்கான பயணங்களும் நேராக அமைந்துவிடும்.மக்களின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகாத எந்த அரசியல்வாதியானாலும் தயவுதாட்சம் இன்றி புறக்கணிக்கும் மனோபாவங்களை உருவாக்கி அதனை செயல் வடிவில் காட்டி தகுந்த பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

முஸ்லிம் அரசியல் மாற்றத்திற்கான தீர்வுகளை மக்கள் தங்களிடத்தில் வைத்துக் கொண்டு வெளியில் தேடிக் கொண்டிருக்கின்றனர்.தனிமனித சிந்தனை மாற்றத்திற்குள்ளிலிருந்தே சமுதாய மாற்றம் ஏற்படும்.ஒவ்வொரு தனிமனிதனும் சமுதாய நோக்குடன் சிந்திப்பானேயானால் பிரம்பு எடுத்து விரட்டப்பட வேண்டியவர்கள் தலைவர்களா?அல்லது மக்களா?என்பது தெரிய வரும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *