உப்புமாவெளி கிராமத்தில், மணல் அகழ்வுக்கான அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, கரைதுறைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட உப்புமாவெளி கிராமத்தில் உள்ள தனியார் காணியொன்றில், மணல் அகழ்வதற்கு, புவிச்சரிதவியல் அளவை சுரங்க பணியகத்தால் மீள்புதுப்பிக்கப்பட்டு, அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.
இந்த அனுமதிப்பத்திரத்தையே இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் முன்னெடுக்கப்படும் மணல் அகழ்வால், வீதியால் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அருகில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு ஆபத்து ஏற்படுமென்று, அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, இது தொடர்பில் மாவட்டச் சமூக பாதுகாப்பு குழுவின் கவனத்துக்குக்;கொண்டு சென்று, அக்குழுவின் அனுமதி இல்லாமல் மணல் அகழ்வுக்கான அனுமதியை புவிசரிதவியல் திணைக்களம் வழங்ககூடாதென, அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் அறிவித்தார்.