இலங்கையின் தேசிய கையடக்க தொலைபேசி சேவை வழங்குனரான ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் நிறுவனமானது தற்பொழுது அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் மூத்த பிரஜைகளுக்கு மாதாந்த கட்டண அடிப்படையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபிடெல் பெக்கேஜ்களை வழங்க முன்வந்துள்ளது.
இந்நிகழ்ச்சித்திட்டமானது தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு தொடர்பான அமைச்சின் எண்ணக்கருவின் அடிப்படையில் அமைச்சர் ஹரிண் பெர்ண்டோவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுவதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு உந்து சக்தியாக இச் செயற்றிட்டம் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.
இச்செயற்றிட்டத்தின் கீழ் அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், சமுர்த்தி பயனாளிகள் மற்றும் மூத்த பிரஜைகளுக்கு மாதாந்த கட்டண அடிப்படையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபிடெல் பெக்கேஜ்கள் வழங்கப்படும். அத்துடன் அரச ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஸ்மார்ட் போன்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளமை விசேட அம்சமாகும்.
மொபிடெல் நிறுவனம் கடந்த 2008 ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு “மொபிடெல் உபஹார” சேவையினை அறிமுகப்படுத்தி நாட்டின் தொடர்பாடல் துறையில் மிகப் பெரியதோர் புரட்சியினை ஏற்படுத்தியிருந்தமை நாம் யாவரும் அறிந்ததே.
2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “மொபிடெல் உபஹார ப்ரோட்பான்” சேவையின் மூலம் அரச ஊழியர்களுக்கு மிக சிறந்த சேவையினை வழங்கியிருந்ததுடன் தற்பொழுது மேம்படுத்தப்பட்ட மிகச் சிறந்த சேவையினை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தின் அனுகூலத்தினை அனைவரும் அனுபவித்திடும் பொருட்டு முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டத்தின் மூலம் தொலைபேசியொன்றினை பெற்றுக் கொள்வதற்கு எந்தவொரு முற்கொடுப்பனவினையும் செலுத்தத் தேவையில்லை. மாறாக மீள திருப்பிப் பெறக்கூடிய (Refundable Deposit) வைப்பாக சிறு தொகையினை வைப்பிட வேண்டும். தொலைபேசியின் பெறுமதிக்குரிய செலுத்த வேண்டிய தொகையாது 24 மாதங்களுக்கு மாதாந்தம் மொபிடெல் பிறகொடுப்பனவு பட்டியல் கட்டணத்துடன் சேர்க்கப்படும். ஒப்பந்த கால முடிவின் போது ஆரம்பத்தில் வைப்பு செய்யப்பட்ட தொகையானது மீள் அளிப்பு செய்யப்படும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கையடக்கத் தொலைபேசிகளானவை அதனை தயாரித்து விநியோகம் செய்யும் நிறுவனத்தின் உத்தரவாதத்தினை கொண்டிருக்கும். தேசிய அடையாள அட்டை மற்றும் ஏனைய ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆரம்பக்கட்ட பரிசீலனைகளின் பின்னர் மேற் குறித்த பிரிவினைச் சேர்ந்த நபர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் அல்லது நவீன தொழில் நுட்பத்துடனான கையடக்கத் தொலைபேசியுடன் மொபிடெல் பிற்கொடுப்பனவு பொதியொன்றும் வழங்கப்படும்.