Breaking
Sun. Nov 24th, 2024

சுஐப் எம்.காசிம் –

சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் பலத்தை சிதைக்கும் தேர்தலாகவா அல்லது பலப்படுத்தும் தேர்தலாகவா இந்தப் பாராளுமன்றத் தேர்தல் அமையப்போகிறது? இக்கேள்விகள் இன்று தமிழ் பேசும் சமூகங்களின் புத்திஜீவிகளைப் பெரிதும் கவலைப்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் பலம் குன்றுவதும், குழம்புவதும் உரிமை அரசியலையே ஆட்டங்காணச் செய்யுமென்பது, சிறுபான்மைத் தளங்களின் பொதுவான கருத்து.

தந்தை செல்வாவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உரிமை அரசியல், ‘ஒட்டகக் கூட்டங்கள் பயணிக்கும் பாலைவனம்போல்’ எத்தனை மேடு, பள்ளங்கள், புழுதி, புயல்கள், எதிரிகளின் பாய்ச்சல்களைக் கண்டு வந்து, இன்று சில கழுத்தறுக்கும் குழிகளுக்குள் விழுந்துள்ளது. சரியான பாதையில் பயணிக்காததால் வந்த வினையாகவும் பகடைக்காரர்கள் குழி தோண்டியதால் வந்த விளைவுகளாகவும் தமிழ் அரசியல் பலவாறாக விமர்சிக்கப்படும் சூழலிது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் நிலைப்பட விரும்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை பல்முனைத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளமை கவலைதான். ஒட்டுமொத்தமாக 29 எம்.பிக்கள் தெரிவாகும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 16 ஆசனங்களை, கடந்த தேர்தலில் கைப்பற்றிய கூட்டமைப்பு, இம்முறை எத்தனையைக் கைப்பற்றும்? இதைத்தான் இக்கட்டுரையும் அலசுகிறது.

சம்பந்தன் ஐயாவின் கூட்டமைப்பு, கடந்த ஐந்து வருடங்களில் விட்ட தவறுகளில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் விடப்பட்டவைதான் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இது, முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் புதிய மாற்றுத் தலைமைக்கும் வழிகோலியது. போர்க்குற்ற விசாரணைக்கு நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணைக்கு மேலும், இரு வருட காலங்களை நீடித்து வழங்க, எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு சம்பந்தன் ஐயா வழங்கிய ஆதரவு, தமிழர்களின் அடங்காத ஆவலுக்கு இக்கட்சி போட்ட முடிச்சு. நந்திக் கடல் யுத்தத்தில் உறவு ,உடமைகளை இழந்து அநாதைகளாகி, அநாதரவாகிய தமிழர்களுக்கு பரிகாரம் வழங்கக் கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற விசாரணையையா இவர்கள் இன்னும் இழுத்தடிப்பது? எதிர்க்கட்சித் தலைவர் அரண்மனையில் வசிக்கும் சம்பந்தருக்கு நந்திக்கடல் வலிகள் எங்கு தெரியப்போகிறது?

இவற்றைத்தான் இப்போது விக்னேஸ்வரனும், சுரேஷ் பிரேமசந்திரனும், அனந்தி சசிதரனும் தமது புதிய கூட்டணிக்கு வாக்களிப்பதற்கான நியாயங்களாகத் தூக்கிப்பிடித்துள்ளனர். இருந்தாலும், நல்லாட்சி நாயகர்களில் மற்றொரு தரப்பாக இருந்த இக் கூட்டமைப்பு, காணாமல் போனோர் அலுவலகத்தை ஸ்தாபிக்கப் பங்களித்தமை, தமிழர்களின் போர்வலிகளுக்கான நிவாரணம்தான். ஆனால், இந்த அலுவலகம் சிங்கள இராணுவத்தை டயஸ்போராக்களுக்கு இரையாக்கும் பலிபீடமென, தெற்கில் ராஜபக்ஷக்கள் குமுறியே, வாக்கு வங்கிகளை மூலதனமின்றிய வட்டியாக்கினர்.

52 நாள் அரசாங்கத்தில், மஹிந்தவின் அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தும் பேரம் பேசும் அரசியல் பலம் சம்பந்தரிடமே இருந்தது. முஸ்லிம் தலைமைகள் முழுமூச்சாக ரணிலைக் காப்பாற்ற நின்றதால் நம்பிக்கையிழந்த ராஜபக்‌ஷக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக நம்பினர். இந்தக் காலத்தில் இலங்கையின் அரசியல், தமிழர்களின் காலடியில் கிடந்ததாகவும் சொல்லலாம். என்ன செய்வது, சம்பந்தன் ஐயாவும் முஸ்லிம் தலைமைகள் போல், ஜனநாயகத்தையே பாதுகாக்க விரும்பினாரே தவிர, மூன்று தசாப்தங்கள் காத்திருக்கும் சமூகத்தைக் காப்பாற்றுவது பற்றி யோசிக்கவில்லை. குறுக்கு வழி துரோகத்தனத்தால் உரிமையை பெறாது நேர்மையாக, தமிழரின் உரிமையைப் பெறுவதுதான் கூட்டமைப்பின் இலக்காக இருந்திருக்கும்.

இவ்விடத்தில் இன்னுமொன்றும் தமிழ் சகோதரர்களைக் கிளறுகிறது. இப்போது ராஜபக்‌ஷக்களுடன் பேச விரும்பும், பேசுவதற்குத் தூதுவிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அந்த 52 நாள் அரசில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். போர்க்குற்ற அரசுடன் பேச முடியாதென்று இன்னும் எத்தனை வருடங்களுக்குச் சொல்லித்திரிவது? போர்க்குற்ற விசாரணைக் காலத்தையே நீடித்து வழங்க உதவிவிட்டு, இப்போது என்ன இந்த லட்சணம்?

ராஜபக்‌ஷக்களின் அரசாங்கம் இன்னும் பத்து வருடங்கள் நிலைத்தால், இந்தப் பத்து வருடங்களுக்கும் தமிழரின் உரிமை பற்றிப் பேசுவதில்லையா? எதிரணியாகக் களம் குதித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியால் விடுக்கப்படும் விமர்சனங்களுக்கு அறிவுபூர்வமான பதில்களை வழங்கும் நிர்ப்பந்தம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தற்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த தடம்புரளும் களம்தான் தமிழர் தரப்பு அரசியலை சூடேற்றப்போகிறது.

இவ்விரு அணிகளும் முன்வைக்கும் கோரிக்கைகள், முழக்கமிடும் கோஷங்கள் எல்லாம் தென்னிலங்கையில், ராஜபக்‌ஷக்களின் கரங்களைப் பலப்படுத்த உதவும் என்பதுதான் பெரும்பான்மை சமூகத்தின் இன்றைய யதார்த்தம். மேலும், சிறுபான்மைச் சமூகங்களின் ஆர்வலர்களுக்கு இப்போக்குகள் கவலை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்தசங்கரி ஐயாவின் கவலையும் இதுவாகத்தானுள்ளது. விடுதலைப் புலிகளின் வழிகாட்டலில், 2001 ஆம் ஆண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்டமைக்கப்பட்டபோது இதிலிருந்து வௌியேறிய சங்கரி ஐயா, இன்று வரைக்கும் இந்த நிலைப்பாட்டில்தான் உள்ளார். தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைக்காகப் போராடிய ஜனநாயக அரசியல் கட்சிகள், பாஷிசவாதிகளின் வழியில் செல்வதா? இவ்வாறு செல்வது தீர்வுகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை தெற்கில் இழுபறிக்குள்ளாக்கும் என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் முன்னாள் எம்.பி சுமந்திரன் அண்மையில் தெரிவித்த கருத்தும் இந்த உண்மையையே புலப்படுத்தியது. “நிர்ப்பந்தத்தால் கட்டமைக்கப்பட்டோமே தவிர, தவறான வழிகளில் தீர்வைப் பெறுதற்கு நாம் தயாரில்லை” என்பதுதான் சுமந்திரனின் கருத்து. தென்னிலங்கை மக்கள் வட இலங்கையின் அரசியல் தாகங்களைத் தவறாகப் புரிவதைத் தௌிவூட்டும், ஆழமான அர்த்தம் சுமந்திரனின் கருத்தில் இருந்தது உண்மை. தமிழ் டயஸ்போராக்களை நம்பியிருப்பதும், சமஷ்டிக்கு தெற்கில் வேறு அர்த்தம் கற்பிக்கப்படுவதும், கருணா அம்மானின் அண்மைய கருத்துக்களும் ராஜபக்‌ஷக்களை இன்னும் நிலைப்படுத்தும் அரசியல் அறுவடைகளே.

இந்த அறுவடைக்குள் ஆதாயம் தேடுவதற்கு சஜித் அணியும் கத்திகளைக் கையிலெடுத்துள்ளது. இதற்கான அறுவடைக் களங்களைத் திறந்துவிட்டுள்ளார் கருணா அம்மான். எனவே, கருணா அம்மானின் கருத்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிளவும் தமிழ் தேசியத்தை எந்தளவு பலவீனப்படுத்தும் என்பதும், தென்னிலங்கையை எப்படிப் பலப்படுத்தும் என்பதும்தான் இன்று எமக்குள்ள ஆதங்கம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *