Breaking
Sat. May 4th, 2024

ஊடகப்பிரிவு

தேசிய ரீதியில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப ஆர்வமுடன் உழைத்துவரும் சஜித் பிரேமதாஸவின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில், முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தமது வாக்குகளை தொலைபேசி சின்னத்துக்கு வழங்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில், இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“யுத்தத்தால் முற்றுமுழுதாக அழிந்த முல்லைத்தீவு மாவட்டத்தை மீளக்கட்டியெழுப்புவதில், நாம் களத்தில் நின்று பணியாற்றியிருக்கின்றோம். துரிதகதியில் மீள்கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்து, முகாம்களிலிருந்த அகதி மக்களை மீளக்குடியேற்றினோம். இந்த வேலைத்திட்டங்கள் பூச்சியத்திலிருந்தே தொடங்கப்பட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்தகாலத்தில் நாம் மேற்கொண்டிருக்கும் அபிவிருத்தியை மீட்டிப்பார்த்து, மனச்சாட்சியுடன் உங்கள் வாக்குகளை அளியுங்கள். எதிர்காலத்திலும் எங்களால் நல்ல பணிகள் முன்னெடுக்கப்படும். அவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டுமென சிந்திப்பவர்கள், நாம் போட்டியிடும் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிப்பீர்கள் என உறுதியாக நம்புகின்றோம்.

முன்னர் எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல் எமது வேலைத்திட்டங்களையும், அரச வேலைவாய்ப்புக்களையும் எல்லா இனங்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளித்திருக்கின்றோம். இனியும் அவ்வாறுதான் கருமமாற்றுவோம். அந்தப் பணிகள் இடையறாது தொடர வேண்டுமானால் மனச்சாட்சியுடனும், நியாயமாகவும், நேர்மையாகவும் சிந்தித்து வாக்களியுங்கள். வன்னித் தேர்தல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் மூலம், ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதற்கான காலமும் கனிந்து வருகின்றது.

எல்லோருக்கும் சமவுரிமை, அனைத்து இனங்களுக்கும் சமமான அபிவிருத்தி கிடைக்க வேண்டுமென சிந்தித்து செயல்படும் ஐக்கள் மக்கள் சக்தியை வெல்லச் செய்வதன் மூலம், எதிர்காலத்தில் இந்த நாட்டிலே எந்தப் பேதமும் இல்லாமல் நாம் வாழ முடியும் என்பதை, நம்பிக்கையுடன் இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகிறோம்” என்று கூறினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *