ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரத்தை மூடி மறைத்தமை மற்றும் சாட்சிகளை மறைத்தமை உள்ளிட்ட குற்றச் சாட்டுக்களின் கீழ் ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்த குற்றச் சாட்டுக்களின் கீழ் கடந்த வாரம் வஸீமின் கொலை தொடர்பில் ஆரம்பத்தில் விசாரணைகளை நடத்திய அப்போதைய நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, அனுர சேனநாயக்க கைதாவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதான முன்னாள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் சம்மிக பெரேரா, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் அப்போது தனது உயர் பொலிஸ் அதிகாரிகள் தனக்கு கொடுத்த அழுத்தம் மற்றும் ஆலோசனைகளுக்கு அமையவே தாஜுதீன் விவகாரத்தை விபத்தாகக் காட்டி கொலையை மூடி மறைத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந் நிலையிலேயே அப்போது இது குறித்த விசாரணைகளை மேற்பார்வை செய்த முன்னாள் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய அனுர சேனநாயக்க கைது செய்யப்படும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் தாஜுதீன் விவகாரத்தில் அனுர சேனநாயக்க கைது செய்யப்படுவதற்கு முன்னர் மேலும் இரு பொலிஸ் உயர் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என பொலிஸ் தலைமையக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது முன்னாள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அப்போதைய நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அப்போதைய பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சர் ஆகியோர் அடுத்த கட்டமாக விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களின் கைதை தொடர்ந்து அனுர சேன நாயக்கவின் கைது இடம்பெறலாம் எனவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனிடையே அனுர சேனநாயக்கவை கைது செய்தால் அவரை இந்த படுகொலை விவகாரத்தில் அரச சாட்சியாக முன்னிலைப்படுத்துவது குறித்த கருத்துக்களும் தற்போது பரவி வருகின்றன. எனினும் இது குறித்த எந்தவொரு தீர்மானத்தினையும் நேற்று மாலை வரை குற்றப் புலனாய்வுப் பிரிவு எடுத்திருக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாலிகா மைதானம் அருகே மதில் ஒன்றுடன் மோதியவாறு எரிந்துகொண்டிருந்த காரில் இருந்து கருகிய நிலையில் வஸீம் தாஜுதீன் சடலமாக மீட்கப்பட்டார்.
இந் நிலையிலேயே கடந்த 2015 பெப்ரவரி 26 ஆம் திகதி இது குறித்த விசாரணைகள் நாரஹேன்பிட்டி பொலிஸாரிடமிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனினால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கையளிக்கப்பட்டது. தற்போது இது குறித்த விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடி கட்டுப்பாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகர, பிரதான பொலிஸ் பரிசோதகர் விமலசிறி ஆகியோரின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றன.