ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசன் அலிக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான சமாதான முயற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கட்சியின் தலைவருக்கும் செயலாளருக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு பின்பு இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை தென் கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஏ.எம். இஸ்ஸாக் மேற்கொண்டு வருகிறார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவரும் வேந்தர் இஷாக்கை தெரிவித்தார்.
ஹசன் அலி விஜயமொன்றினை மேற்கொண்டு ஒருவார காலமாக இந்தியாவில் இருந்ததால் சமாதான முன்னெடுப்புகளில் தாமதமேற்பட்டது. மீண்டும் சில தினங்களில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றார்.
கடந்த வருடம் பொல்கொல்லையில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசன் அலியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு மேலதிகமாக செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
கட்சியின் அரசியல் உயர்பீட அலுவல்கள் மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்காக புதிய ஒரு செயலாளர் நியமிக்கப்பட்டார்.
இவ்விவகாரங்களை ஏற்கனவே ஹசன் அலி கையாண்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதனையடுத்தே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ஹசன் அலிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.