எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை நாடாளுமன்றத்தில் எந்தவொரு தனிக்கட்சிக்கும் மக்கள் பெரும்பான்மை பலத்தை அளிக்கமாட்டார்கள் என்று ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி ஆருடம் வெளியிட்டுள்ளது.
யுத்த வெற்றியை வைத்து பொதுத் தேர்தலை நடத்திய ராஜபக்சவினரது அரசாங்கத்திற்கு கிடைக்காத பெரும்பான்மை பலமானது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கிடைக்கப் போவதில்லை என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லால் காந்த தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தியின் கீழ் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்றைய தினம் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளனர்.
குறிப்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களே இந்த வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதற்கான நிகழ்வு கண்டியிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்றைய தினம் முற்பகல் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அளித்துவரும் சட்டவல்லுநரான லால் விஜேநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிற்சங்கப் பிரிவுத் தலைவருமான கே.டி. லால்காந்த இம்முறை கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
வேட்புமனுவில் கையெழுத்திட்ட பின்னர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த,
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை வழங்கினால் ஏற்படுகின்ற விளைவுகளை நன்கு அறிந்தபடியினால் அந்த அதிகாரத்தை இம்முறை எவருக்கும் மக்கள் அளிக்கமாட்டார்கள் என்று தெரிவித்தார்.
“தற்போது ஆட்சியிலுள்ள கோட்டாபய ராஜபக்ச மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை வழங்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் நம்நாட்டு மக்கள் அதனை செய்யமாட்டார்கள் என்று நம்புகிறோம்.
இன்றுவரை தற்போதுள்ள தேர்தல் முறைக்கு அமைய எவருக்கும் தனித்து பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது.
மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச மக்களின் பிரபல்யத்தின் உச்சத்திலிருந்த போதிலும் போர் முடிந்த கையுடனும்கூட நாடாளுமன்றத் தேர்தல்களில் பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக்கொள்ள முடியாமற் போனது.
இப்போதும் அவர்களால் நாடாளுமன்றப் பெரும்பான்மை பலத்தை பெறவும் முடியாது.
அன்று எதிர்கட்சியிலுள்ளவர்களை பணம் கொடுத்து வரப்பிரசாரங்களைக் கொடுத்து தம்வசம் இழுத்துக் கொண்டே பெரும்பான்மை பலத்தை உருவாக்கினார்கள்.
அந்த அதிகாரத்தை வைத்து மக்களுக்கு நன்மை செய்யாமல் 18வது திருத்தத்தையே கொண்டுவந்தார்கள். ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தார்கள்.
இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் என்பது நாட்டு மக்களுக்கு இடையூறையும் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த அனுபவங்களையும் கண்முன் கொண்டுவருகின்றது.
ஆகவே நாடாளுமன்றத்தில் இம்முறையும் அந்த அதிகாரத்தை மக்கள் யாருக்கும் வழங்கமாட்டார்கள். இந்த நாட்டில் கடந்த காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விற்பனைப் பொருட்களாக மாறியிருந்தார்கள்.
அதனால் விற்பனைக்குப் போகாத கடமைகளை நிறைவேற்றுபவர்களை தெரிவுசெய்வதற்கான கடமை மக்களின் கைகளில் உள்ளது” என கூறினார்.