தமிழ் பேசும் மக்களின் நலன்களையும் அபிலாஷைகளையும் உள்வாங்கிய வகையிலான அரசியல் அமைப்புத் திட்ட முன்மொழிவொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தயாரித்துள்ளது.
தென்கிழக்கு கரையோர நிர்வாக மாவட்டம், ஐக்கிய இலங்கைக்குள் சகல இனங்களையும் திருப்திப்படுத்தும் நீதியான அதிகாரப் பகிர்வு, வடக்கும் கிழக்கும் தற்போது நடைமுறையில் உள்ள படியே தொடர்ந்தும் இயங்கச் செய்வதற்கான ஏற்பாடு, தேர்தல் முறை மாற்றத்தில் எந்த ஓர் இனமும் பாதிக்கப்படக் கூடாதென்பதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தத் தீர்வுத்திட்ட முன்மொழிவு அமைந்துள்ளதாக அக்கட்சியின் அரசியல் விவகார, சட்டப்பணிப்பாளர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்துள்ளார்.
மக்கள் காங்கிரஸின் “அரசியல், மறுசீரமைப்ப விசேட குழு” அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆலோசனை நடத்துவதற்காக ஆறு தடவைகள் கூடியது. தற்போது இறுதி வடிவம் பெறப்பட்டு முன் மொழிவு நகல் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் ஜனநாயக விழுமியங்களையும் பண்புகளையும் பலப்படுத்தும் வகையில் இந்தத் தீர்வுத்திட்ட முன்மொழிவு தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன் அடிப்படையில் அரசியல் ஆர்வலர்கள், துறை சார்ந்த நிபுணர்கள், முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கருத்துரையாடல்களையும் கட்டம் கட்டமாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த “மக்கள் மஷூரா மன்றம்” சார்ந்த பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் மட்டுமின்றி சிறுபான்மை, சிறிய கட்சிகளான மக்கள் விடுதலை முன்னனி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயகத் தேசிய முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றையும் தனித்தனியாக சந்திக்க விசேட குழு முடிவு செய்துள்ளது.
/div>
எந்த ஒரு தீர்வுத்திட்ட முயற்சியும் முஸ்லிம் மக்களை பாதிக்காத வகையிலும் அதே வேளை தமிழ்- முஸ்லிம்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தாத வகையிலும் அமைய வேண்டுமென்பதையே நாட்டுத் தலைமைகளிடம் எமது கட்சியின் தலைவர் ரிஷாட் வலியிருத்தியிருப்பதாக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.