ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சகல சிறுபான்மை மக்களையும் அரவணைத்துச் செல்லும் நிலையில் ரவூப் ஹக்கீமும், அவரது கட்சியினரும்.
ஜனாதிபதி சிறுபான்மையினரை அழைத்து செல்ல வேண்டும் என மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் தம்மை அழைத்து அமைச்சு பதவி தர வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லும் பிச்சைக்கார அரசியலை செய்வது முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்துவதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலமா கட்சித்தலைமை காரியாலயத்தில் நடந்த கூட்டத்தில் வைத்து நேற்றிரவு கருத்து தெரிவிக்கும் போதே கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றது முதல் சிறுபான்மை இனத்தவருக்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். புலனாய்வு பிரிவின் தலைவராக ஒரு முஸ்லிமை நியமித்ததன் மூலம் கோட்டாபய இனவாதமற்ற தலைவர் என்பதை நிரூபித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் சிறுபான்மை மக்களில் குறிப்பாக முஸ்லிம்களில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டோர் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதிக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து பாடுபட்ட நாற்பது கட்சிகளில் பத்துக்கு மேற்பட்டவை சிறுபான்மை கட்சிகளாகும்.
அதில் பிரபல்யமான மூன்று முஸ்லிம் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதன்மூலம் சிறுபான்மை கட்சிகளையும் பதவிகளுக்கு அப்பால் தோழமையுடன் ஜனாதிபதி அரவணைத்து செல்லும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதியை விழித்து சிறுபான்மை மக்களை அரவணைக்க வேண்டும் என்பதன் மூலம் இவரது கட்சியை அழைத்து அமைச்சர் பதவி தர வேண்டும் என்பதையே இவர் சொல்கிறார்.
அமைச்சு பதவிக்காக மதமும் மாறுவார் என சொல்லப்படும் ஹக்கீம் இப்படிச்சொல்வதன் மூலம் முஸ்லிம்களை பதவி வெறி பிடித்தவர்களாக காட்டுவதை உலமாக்கள் தலைமையிலான உலமா கட்சியால் கண்டிக்காமல் இருக்க முடியாது.
பெரமுனவுடன் இருக்கும் கட்சிகள் சிறு கட்சிகளாக இருந்தாலும் உண்மையும், நேர்மையும் கொண்ட கட்சிகளாகும். வர்க்க பேதத்தை வளர்ப்போரே சிறு கட்சி பெரிய கட்சி என கூறுவர்.
இன்று இறைவன் இத்தகைய சிறு கட்சிகள் இருக்கும் பக்கம் வெற்றியை தந்து அவற்றை கௌரவித்துள்ளான். ஆகவே ஜனாதிபதி கோட்டாபயவும், பிரதமர் மஹிந்தவும் இன்றுவரை
சிறுபான்மை மக்களையும் சிறுபான்மை கட்சிகளையும் அரவணைத்தே செல்கிறார் என்பதை ரவூப் ஹக்கீமுக்கு தெளிவாக சொல்கிறோம் என கூறியுள்ளார்.