இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்களை ஆரம்பித்த போது, பாதுகாப்புத் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு, பாதுகாப்பு படைகள், பொலிஸாருடன் கலந்துரையாடுவதற்கு முன்னதாக, பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களுடன் தான் பேச்சுக்களை நடத்தியிருந்தது.
சமூக ஊடகங்களின் வழியாக தவறான தகவல்கள் பரப்பப்படும் ஆபத்து முன் எப்போதும் இல்லாதளவுக்கு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, சமூக ஊடகங்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கு, இலகுவாகப் பயன்படுத்திக் கொள்ளலாம், தேர்தல் வெற்றிக்கு சாதகமான பெறுபேறுகளை பெறலாம் என்ற கருத்து அரசியல்வாதிகளிடத்தில் இருந்தது.
இந்தியாவிலும் அமெரிக்காவிலும், மாத்திரமின்றி இலங்கையிலும் கடந்த முறை ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவதில் சமூக ஊடகங்களின் பிரச்சாரங்கள் வலுவான கவனத்தை ஈர்த்திருந்தன. ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை.
சமூக ஊடகங்கள், தவறாகப் பயன்படுத்தப்பட்டு, மக்களை தவறாக வழி நடத்தி, தேர்தலின் போக்கை, மாற்றியமைத்து விடுமோ என்ற கவலை அரசியல்வாதிகளிடமும் இருக்கிறது. தேர்தலை நடத்தும் அதிகாரிகளிடமும் இருக்கிறது.
ஏனென்றால், பொய்யான தகவல்கள், போலியான செய்திகள், தவறாக வழிநடத்தும் பதிவுகளால், சமூக ஊடகங்கள் நிரம்பியிருக்கின்றன.
இதனால் நவீன உலகின் பாதுகாப்புக்கு மிக மோசமான அச்சுறுத்தலாக சமூக ஊடகங்களும், இணையமும் (Syber) பார்க்கப்படுகின்ற நிலை தோன்றியிருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலில், சமூக ஊடகங்களின் மூலமாக, தவறான பிரச்சாரங்கள், தகவல்கள் பரப்பப்படுவதை எந்தளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதற்கு பேஸ்புக் நிறுவனம் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் உதவ முன்வந்திருந்தாலும், சமூக ஊடகங்கள் குறித்த அச்சம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், அரசாங்கத்துக்கும் நிறையவே இருக்கிறது.
கடந்த தசாப்பதத்திலோ அதற்கு முன்னரோ சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவையாக இருக்கவில்லை.
எனவே, அது ஒரு பெரும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படவில்லை. ஆனால், இப்போது சமூக ஊடகங்களும் இணையமும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலுக்குரிய விடயங்களாக மாறியிருக்கின்றன.
இவற்றின் மூலம் எப்போது, எந்த வழியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தோன்றும் என்று கணிக்க முடியாது. யாருடன் மோதுகிறோம் என்றும் சரியாக கண்டறிய முடியாது.
பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத எதிரியோடு, இருட்டில் கண்களையும் கட்டி விட்டு மோத வேண்டிய நிலையே இருக்கும்.
இதனால் தான், இலங்கை இராணுவம் உள்ளிட்ட உலக நாடுகளின் இராணுவங்களின் கவனம், இணையப் பாதுகாப்பின் மீதும் அதனைச் சார்ந்த போர்முறையின் மீதும், தற்காப்பு ஏற்பாடுகளின் மீதும் இப்போது திரும்பியிருக்கிறது.
கடந்த 04ஆம் திகதி இந்தியாவின் பன்ஜிம் நகரில், Goa martine conclave என்ற இரண்டு நாள் கடல் பாதுகாப்புக் கருத்தரங்கு ஆரம்பமானது.
இலங்கை, மாலைதீவு, பங்களாதேஷ், மியன்மார், தாய்லாந்து, இந்தோனேஷியா, மொறீசியஸ், சீஷெல்ஸ், சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளின் கடற்படைத் தளபதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டை, துவக்கி வைத்து உரையாற்றியிருந்தார் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல்.
அவர் தனது உரையில், கடல், விண்வெளி மற்றும் இணையம் ஆகிய மூன்றும், நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் தீவிரமான அச்சுறுத்தலாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதில், கடல்சார் பாதுகாப்பு என்பது மரபுவழியில், பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாகவே கடல் பாதுகாப்புக்கான முயற்சிகள் இடம்பெற்று வந்திருக்கின்றன.
நவீன உலகில், விண்வெளிப் போர்முறையை அமெரிக்காவும் ரஷ்யாவும் கடந்த நூற்றாண்டிலேயே கையில் எடுத்திருந்தன.
இது, இந்தியா போன்ற நாடுகளாலும் இப்போது, அச்சுறுத்தலாகப் பார்க்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது.
இவை இரண்டையும் தவிர, இணையத்தை, தேசிய பாதுகாப்புக்கான மிகப் பெரிய அச்சுறுத்தலாக பார்க்கிறார் அஜித் டோவல்.
இணையம் வழியாக பரவுகின்ற செய்திகளும், பரப்பப்படும் தகவல்களும், சரியானதும் நேர்வழியான பயன்களை கொடுப்பதை விட, எதிர்மறையான நோக்கங்களுடனேயே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இது, இந்தியாவுக்கு மாத்திரமின்றி இலங்கை போன்ற ஏனைய பல நாடுகளினதும், தேசிய பாதுகாப்புக்கான மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
இலங்கையில், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் பரவிய போதும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்களை அடுத்தும் சமூக ஊடகங்களை முழுமையாக முடக்கி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏனென்றால், அவற்றின் வழியாக பரவிய, பரப்பப்பட்ட தவறான தகவல்கள், வன்முறைகளையும், அழிவுகளையும் அதிகரிப்பதற்குக் காரணமானவையாக இருந்தன.
சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பது என்பது, நீண்டகாலத்துக்கு கையெடுக்கக் கூடியதொரு பாதுகாப்பு முன்னேற்பாடு அல்ல.
குறிப்பாக, பேஸ்புக், டுவிட்டர், வைபர், வாட்ஸ்அப், இன்ஸ்ட்கிராம் போன்ற சமூக ஊடகங்களை முடக்கி வைப்பது, இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான நிரந்தர வழியில்லை ஏனென்றால், தொழிநுட்பங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. மாற்று வழிகளும் கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே, பாரம்பரிய பாதுகாப்பு வழிமுறைகளை மாத்திரம் நம்பிக் கொண்டிருக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
போலிச் செய்திகளின் மூலம் வன்முறைகள் தூண்டப்படுவதை தடுக்க சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தினால், அல்லது முடக்கினால் சரி என்ற நிலை இப்போது இல்லை.
ஏனென்றால், இப்போது இலங்கையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் தமது அலைபேசிகளில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாமல் முடக்கினாலும், அவற்றை பயன்படுத்தக் கூடிய வகையிலான வி.பி.என் செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாற்று வழியையும் அடைப்பதற்கான வழியைக் கையாள வேண்டிய நிலையில் அரசாங்கத்தின் பாதுகாப்புக் கட்டமைப்புக்கள் இப்போது இருக்கின்றன.
கடந்த மாதம், 24ஆம் திகதி கொழும்பு சினமன்ட் கிரான்ட் விடுதியில் 7ஆவது, Annual Cyber Security Summit 2019 இடம்பெற்றிருந்தது.
இதில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நிகழ்த்தியிருந்த உரை, பாதுகாப்பு அச்சுறுத்தலின் புதியதொரு வடிவத்தை தெளிவாக விளக்கும் வகையில் இருந்தது.
அவர் இணையவெளியில் உருவாகியிருக்கும் அச்சுறுத்தல்களைப் பற்றி விரிவாக விபரித்திருந்தார்.
சமூக ஊடகங்கள், மக்களை தவறாக வழிநடத்துகின்றன. மக்களுக்கு தவறான தகவல்களை அளிக்கின்றன என்பதே அவரது பார்வையாக இருந்தது.
“இலங்கையின் கணினி கல்வியறிவு வீதமும் இணைய ஊடுருவலும் வேகமாக வளர்ந்து வருவதால், நாட்டு மக்கள் தவறான தகவல்களால் பாதிக்கப்படுகின்றனர்.
பல சக்திகள் தவறான தகவல்களை பரப்பவும், சமூக ஒற்றுமையை சிர்குலைக்கவும் முயற்சிக்கும்.
தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்கள், சமூக ஊடகங்களுக்கு முன்னால் அமர்ந்திருப்பது தற்கொலை குண்டுதாரியை விட ஆபத்தான நிலையாகும். சமூக ஊடகங்களிலிருந்து வெளிவரும் பன்முகப்படுத்தப்பட்ட அச்சுறுத்தலும் தேசிய பாதுகாப்பிற்கான தீவிர கவலைகளாக மாறியுள்ளன.
சமூக ஊடகங்கள் கருத்தை மாற்றவும், வெவ்வேறு தீங்கு விளைவிக்கும் சித்தாந்தங்களைத் தூண்டவும் பயன்படுத்தப்படுகின்றன” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
போர், தலைமுறை தலைமுறையாக புதிய புதிய பரிமாணங்களை எடுத்து வருகிறது என்றும், இணைய மூலமான அச்சுறுத்தல் அதன் ஆகப் பிந்திய வடிவம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இப்போது இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றும் போது, எதிர்கால பாதுகாப்பு சவால்கள் எந்த வழியில் வரும் என்பதை சரியாக கணிக்க முடியாது என்று கூறி வருகிறார்.
இணைய பாதுகாப்பு மற்றும் சமூக ஊடகங்களின் அச்சுறுத்தல் குறித்து, உலகின் முக்கியமான இராணுவங்களே பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுகின்ற நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு போன்றவற்றினால் இந்த அச்சுறுத்தல்களை இலகுவாக எடுத்துக் கொள்ளவோ கையாளவோ முடியாது.
இலங்கையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் பல புதிய அனுபவங்களை கொடுத்து வருகிறது. அதில் இணைய அச்சுறுத்தலும், சமூக ஊடகங்கள் பற்றிய எச்சரிக்கையும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் எப்போது, எப்படி மோதுவது என்ற எந்த புரிதலுமின்றி இணைய வெளிப்போருக்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவது என்ற ஒற்றை ஆயுதத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த அச்சுறுத்தலில் இருந்து, தேர்தல் சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.