எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மீதோ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதோ முஸ்லிம் மக்களுக்கு துளியேனும் நம்பிக்கை கிடையாது.
இதனாலேயே வடக்கு கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர்.
இதனால் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியப்படாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சமஷ்டி கோரிக்கையினால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது என்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.
கட்சியின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இன்றுவரையில் சிங்கள, முஸ்லிம் மக்களின் மனங்களை வெற்றிக்கொள்ள முடியாது போயுள்ளது. ஆகவே வடக்கு, கிழக்கை ஒன்றிணைப்பதும் சாத்தியப்படாது.
சித்திரை புத்தாண்டு எமது நாட்டின் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நாள் என்ற அடிப்படையிலேயே உள்ளது. ஆனால் வடக்கின் அரசியல் வாதிகள் அந்த நல்லநாளிலும் பிரிவினைவாத கருத்துக்களை வெளியிடுவதால் நாட்டில் நல்லிணக்கம் பாதிக்கப்படுகின்றது.
தனிநாடு என்றால் இந்நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்கள் அச்சப்படுவர் என்ற காரணத்தினால் சமஷ்டி ஆட்சி என்ற வாசகத்தை பயன்படுத்துகின்றனர்.
தமிழ் மக்களின் அரசியல் தலைவராக மட்டுமல்லாது முழுநாட்டினதும் எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெற்றுக்கொண்டுள்ள சம்பந்தன் யுத்தத்தின் விளைவுகளை கண்ணில் கண்டவர்.
இதனால் தமிழ் மக்கள் ஒருவித பயனையும் அடையவில்லை என்பதையும் அவர் அறிவார். அவ்வாறிருந்தும் மீண்டும் பழைய இடத்திற்கு அவர்கள் திரும்பிச் செல்ல முற்படுவது நல்லிணக்கத்தை பாதிக்கும்.
அதனாலேயே வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதையம் இவ்விரு மாகாணங்கள் மொழி அடிப்படையில் தமிழ் பேசும் தனிப்பிராந்தியமாக பிரகடனப்படுத்தப்படுவதையும் எதிர்க்கின்றோம்.
எவ்வாறாயினும் இன்றுவரையில் சம்பந்தன் தமிழ் மக்களுக்கான தலைவராக மட்டுமே செயற்பட்டுள்ளார்.
அதனால் இந்நாட்டு சிங்கள, முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை அவரால் பெற்றுக்கொள்ள முடியாது.
அதேபோல் புதிய அரசியலமைப்பு தமிழ் மக்கள் ஏற்கும் வகையில் இல்லாவிட்டால் கடினமாக எதிர்ப்போம் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையின் அபிலாஷைகளை மட்டும் மையப்படுத்தியதாக தான் புதிய அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்றால் அவ்வாறானதொரு அரசியலமைப்பு எமது நாட்டிற்கு அவசியம் இல்லை.
அகவே இவ்வாறான குழப்ப நிலைகளை நாட்டிற்குள் தோற்றுவித்து தமிழ் மக்களை மீண்டும் பின்னடைவைச் சந்திக்கச் செய்ய வேண்டாம் என தமிழ் அரசியல் தலைமைகளிடத்தில் கேட்கிறோம் என்றார்.