தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர். அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதங்கம் வெளியிடுட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் நேற்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று 879 நாளாக எமது தொடர் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இன்றுவரை எமது நிலை தொடர்பில் தீர்வு வழகுவதற்கு எவரும் முன்வரவில்லை. இதுவரை 30 பேர்வரை தமது பிள்ளைகளை காணாதவர்களாக உயிரை மாய்த்துள்ளனர்.
இந்த நிலையில் எமது அமைதிவழி போராட்டங்களை குழப்பும் வகையில் எமது கோவில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்து வருகின்றது. இவை திட்டமிட்டு எம்மீது திணிக்கப்படுகின்றமையை உணர்கின்றோம்.
எமது அரசியல் தலைமைகள் அரசாங்கத்துடன் ஒத்து செயற்படுவதனாலேயே அவர்கள் மனோ கணேசனை அழைத்த போது அவர் சென்றிருக்கவில்லை.
உண்மையில் அவர்கள் அங்கு சென்றிருந்தால் அவர்களிற்கு சங்கடமான நிலை ஏற்பட்டிருக்கும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுகின்றது.
வடக்கில் உள்ள தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரே அணியாக தேர்தலில் களம் இறங்க வேண்டும், விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்மை ஏமாற்றிவிட்டது.
அவர்கள் தமது சுயநலம் சார்ந்து செயற்படுகின்றனர். இந்த நிலையில் எமது பிள்ளைகளின் விடிவிற்காகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசுவதற்கு ஓர் பொது அணி தேவைப்படுகின்றது. அவ்வாறு அனைத்து தரப்பும் ஓரணியில் திரண்டு செயற்படுவதே பொருத்தமானது.
எமது அரசியல் தலைமைகள் சொத்துக்களை சேர்கின்றார்களோ தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திற்கும், காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்படுவதற்கும் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தனர்.
அவ்வாறு அவர்கள் தமது சுயநலத்தினை கருத்தில்கொண்டு செயற்பட்டமையால் அவர்களிற்கு வரபிரசாதங்கள் பல வழங்கப்பட்டிருக்கும். ஆகவே அவ்வாறு கிடைத்த அனைத்தையும் அவர்கள் சொத்தாக்கியிருப்பார்கள்.
அவர்கள் மக்கள் நலன் சார்ந்து செயற்படவில்லை. அவர்கள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர்.
அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.