Breaking
Sun. Nov 24th, 2024
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழா முறிப்பை பிறப்பிடமகவும் லண்டன் மில்ரன் கீன்ஸை வதிவிடமாகவும் கொண்ட எமது தோழர் சிவபாதம் ரவீந்திரன் (ரவி ) மரணம் அடைந்ததாக கிடைத்த செய்தி எமக்கு ஆழ்ந்த வருத்தங்களையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றது.

அன்னாரின் குடும்பம் முழுவதுமே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கொள்கை வழி நின்று கட்சிக்காகவும் தமிழ் தேசிய இனத்திற்காகவும் ஆற்றி வருகின்ற பணி அளப்பரியது.தோழர் ரவியின் சகோதரனான தோழர் ஸ்ரீ எமது கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்றி கொண்டிருந்தவேளையில் திடீர் சுகவீனம் காரணமாக மரணமடைந்தார். தோழர் ஸ்ரீ இன் துணைவியாரின் சகோதரனான தோழர் வேணு எமது கட்சியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்வாறாக தோழர் ரவியின் குடும்பம் முழுவதுமே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கே தமது பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்கியிருந்தனர்.

தோழர் ரவி ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் தனது கல்வியை மேற்கொண்டு பின் புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்த போதிலும் தனது பாடசாலையின் கல்வி அபிவிருத்தியிலும் பாடசாலைக்கான பௌதீகவளங்களை பெற்றுக் கொடுப்பதிலும் புலம்பெயர் வாழ் ஒட்டுசுட்டான் பழைய மாணவர்களுடன் இணைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

யுத்தத்தினால் மட்டுமன்றி இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் மட்டுமன்றி தனது நன்பர்கள் மற்றும் தோழர்கள் ஊடாகவும் நிதி திரட்டி வன்னி மக்களின் அவலங்களை போக்குவதற்கு புலம்பெயர்ந்த நிலையிலும் துணைபுரிந்திருக்கின்றார்.தோழனின் உடல் மட்டும் லண்டனில் இருந்ததே தவிர அவரது எண்ணங்கள் செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதிலும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கும் உழைப்பதாகவே இருந்தது.

சிறந்த நகச்சுவை உணர்வு கொண்டவராகவும் தோழமையை பேணுவதிலும் நட்பை பேணுவதிலும் தனித்துவமான அணுகுமுறையை கொண்டிருந்தார். சிறந்த மனிதாபிமானியாக திகழ்ந்தார். விருந்தோம்பலில் தன்னிகரற்றவராக திகழ்ந்த இவர் விருந்துக்கு வந்தவர்களுக்கு தன்கையால் உணவு சமைத்து பாரிமாறுவதில் பேரானந்தம் கொண்டிருந்தார். இந்த பண்பு அவரை அனைத்து மட்டங்களிலும் உயர்வடைய செய்திருந்தது. ஒரு முறை அவரை பார்த்த மாத்திரத்திலே அவரின் தொடர்பை தொடர்ந்து பேணவேண்டும் என விரும்புவபர்களே அதிகம்
கட்சியின் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் கட்சி வழங்கும் பணிகளை சிரமேற்கொண்டு செய்து முடிப்பதில் வல்லவர் தோழர் ரவி உடல் நலக்குறைவால் லண்டனில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபோது எந்திரமயமான வாழ்கையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் அவரை வந்து பாரத்துவிட்டு சென்ற விதம் அவர் ஒவ்வொருவருடனும் வைத்திருந்த உறவுமுறை புலனாகிறது.தமிழ் மக்களின் விடிவுக்காக கொள்கை பிடிப்புடனும் பற்ருறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் குடும்பத்தாரை இணைத்து செயற்பட்ட தோழர் ரவியின் பிரிவு அன்னாரின் குடும்பத்திற்கு மட்டுமல்லாது உலக வாழ் தமிழ் சமூகத்திற்கும் இலங்கை மக்களுக்கும் குறிப்பாக ஈழத்தமிழ் மக்களுக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.

அன்னாரின் இழப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு . பாரிய இழப்பாகும். அன்னாரை பிரிந்து வாழும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நான்கு பிள்கைளை இழந்து தவிக்கு தாயார்   நன்பர்கள் தோழர்கள் ஆகியோருடன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி துயரத்தில் பங்குகொள்கின்றது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

ந.சிவசக்தி ஆனந்தன்
செயலாளர் 
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
பாராளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்டம்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *