முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பிலேயே இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்திரிக்கா குமாரதுங்கவின் சார்பில் அவரால் அனுப்பட்ட சிறப்பு பிரதிநிதியொருவரே சந்திப்பில் கலந்துகொண்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
குமார வெல்கமவின் நிலைப்பாடு என்னவாகவுள்ளது என்பதை அறியும் நோக்கிலேயே தான் நேரில் களமிறங்காது தனது பிரதிநிதியொருவரை சந்திரிக்கா அனுப்பியுள்ளதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் பாரிய கூட்டணி அமைத்து எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சுதந்திர கட்சியை பாதுகாக்கும் நோக்கில், அந்த கட்சியை சேர்ந்த சிலரை இணைந்துக்கொண்டு சந்திரிகா குமாரதுங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இதனிடையே, சுதந்திரக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இவ்வாறான நிலையில், குறித்த இருவருக்கும் இடையிலான சந்திப்பு மகிந்த – மைத்திரி தரப்பினருக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.