அல்ஹம்துலில்லாஹ்.நேற்றைய நாள் வாழ்க்கையின் மிகச்சிறந்த ஒரு தினமாக இருந்தது. என்னுடைய வாழ்வின் மதிப்புமிக்க தருணங்கள் வரலாற்றிலும் ஒரு அங்கமாகியிருக்கிறது. சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் ஆடைக்கட்டுப்பாட்டிற்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டம் தேசிய அளவில் கடுமையான விவாதங்களை உருவாக்கும் என்பதை நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் பதியப்படும் ஆதரவான செய்திகள் மற்றும் வாழ்த்துக்கள் எங்களை ஆச்சர்யப்படுத்துகிறது. எனக்கு இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக நேற்று நடைபெற்ற போராட்டங்களுக்காக நான் இறைவனுக்கு என்னுடைய நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
எங்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்த சகோதர , சகோதரிகள் , கல்லூரி நண்பர்கள் ஆகியோருக்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இறைவன் உங்கள் அனைவர் மீதும் அருள் புரிய வேண்டும்.
உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்த பிரச்சினை இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொரு தனி நபர்களாலும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
சி.பிஎஸ்.இ நிர்வாகம் வெளியிட்டிருக்கும் ஆடைக்கட்டுப்பாட்டு உத்தரவு பெண்கள் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்னும் உரிமையை பிடுங்கும் செயலாகும்.
இது குறிப்பிட்ட முஸ்லிம் சமூகத்தினை மட்டும் பாதிக்கும் பிரச்சினையில்லை. யார் யாரெல்லாம் ஆடைகளின் மூலம் தங்களுடைய கண்ணித்தையும் , ஒழுக்கங்களையும் பேணுவதற்கு நினைக்கிறார்களோ அவர்கள் அத்தனை பேரையும் தேர்வுகளை எதிர் கொள்வதிலிருந்து இந்த முட்டாள்தனமான கட்டுப்பாடுகள் தூரமாக்குகிறது.
இது போன்ற மத்திய நிர்வாகங்களின் செயல்பாடுகள் ஆர்.எஸ்.எஸ்-ன் பொது சிவில் சட்டத்திற்கான மறைமுக அமுல்படுத்துதல்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஜனநாயகம் , மத்தச்சார்பின்மை , சமநீதி ஆகியவற்றின் மீது நம்பிக்கையுள்ள அனைவரின் ஆதரவும் கட்சிகள் மற்றும் இயக்க வேறுபாடின்றி எங்களுக்கு கிடைத்திருப்பது பற்றி சந்தோசம் அடைகிறேன்.
அதே நேரத்தில் இன்னும் கூட சிலர் எங்களுடைய இயக்கம்தான் இதுபோன்ற பெண்களுக்காக அதிகம் போராடுகிறது, நாங்கள்தான் இந்த போராட்டங்களின் முன்னோடிகள் என்று சகிப்புத்தன்மையற்று பேசிக்கொண்டு இருப்பது கவலை அளிப்பதாகவும் உள்ளது.
தோழர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன் கட்சி, மற்றும் இயக்க வேறுபாடுகளை மறந்து இந்த ஆடைக்கட்டுப்பாட்டிற்கு எதிராக ஒன்றிணைந்து போராடுங்ககள்.
நாங்கள் நடத்திய போராட்டம் வெறும் பிரபலம் அடைவதற்காக நடத்தப்பட்டது அல்ல. உங்களுடைய குழந்தைகள் , சகோதரிகள் , சகோதரர்கள் அல்லது நீங்களே கூட இந்த சமூகத்தில் கண்ணியத்துடன் , உங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளுடன் வாழ வேண்டுமெனில். தேர்வுகளின் பெயரால் உங்களுடைய உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டுமெனில் நீதிக்காக ஒன்றிணைந்து போராடுங்கள்.
மே 1-ம் தேதி தேர்வுகள் துவங்க இருக்கின்றன. எனக்கு நம்பிக்கையிருக்கிறது இந்த குறுகிய காலத்திற்குள் நீங்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து போராடுவீர்கள் என்று நம்புகிறோம்.
இறுதியாக ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இத்தனை போராட்டங்களிலும் , சமூக தளத்திலும் எங்களுடன் இருந்து செயல்பட்ட , எங்களுக்கு ஆதரவு அளித்த பெற்றோர்களுக்கும் , உறவினர்களுக்கும் நன்றி .
அவர்கள்தான் எங்களின் உத்வேகத்திற்கு காரணம். இன்னும் இறுதியாக எங்களை ஒரு புனித நோக்கத்திற்காக ஒருங்கிணைத்த , அதற்காக கைது செய்ய வைக்கப்பட்ட கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கும் எல்லா நன்றிகளும் பிரார்த்தனைகளும். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் வெற்றியை நோக்கி வழிநடத்துவானாக.