Breaking
Sat. Nov 23rd, 2024

எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்துக்கொண்டு தேசிய ஐக்கியம் மற்றும் ஊழல் எதிர்ப்பு தொடர்பான பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க போவதாக பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த வித்தானகே தெரிவித்துள்ளார்.

வெலிகடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நலன் அறிய நேற்று சிறைச்சாலைக்கு சென்று திரும்பும் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

டிலந்த வித்தானகேவுடன் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியும் சிறைச்சாலைக்கு சென்று ஞானசார தேரரை சந்தித்துள்ளார்.

எதிர்காலத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்த்துள்ளதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவில் சமூகம், முஸ்லிம் அமைப்புகள் இணைந்து, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஆறு கூட்டங்களை நடத்தி, நாங்கள் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டோம்.
இதில் பெரிய பலன் கிடைத்தது.

குறிப்பாக கிங்தொட்டையில் நடந்த சம்பவத்தின் போது, பௌத்த பிக்குமார் சென்று அந்த பிரச்சினையை தீர்த்து வைத்தனர்.

மியன்மார் அகதிகள் வந்திருந்த நேரத்தில் பெரிய பிரச்சினை ஏற்பட்ட மோதலான நிலைமை உருவானது, அப்போது டிலந்தவுடன் பேசி, ஞானசார தேரரையும் அழைத்துச் சென்று பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தோம்.

அதேபோல், திகனவில் ஏற்பட்ட சம்பவத்தின் போது ஞானசார தேரர், மரண வீட்டுக்குச் சென்று முடிந்தளவு பிரச்சினை சமரசம் செய்து வைத்தார்.

இவ்வாறு இணக்கப்பாட்டுக்கு வந்து, சிங்கள, முஸ்லிம் மக்கள் இடையில், எந்த பிரச்சினையும், மோதலும் ஏற்படாத சூழலை நாங்கள் ஏற்படுத்தி வந்த நேரத்திலேயே ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *