Breaking
Mon. Nov 25th, 2024

அண்மைக்காலமாக இலங்கை அரசியல் பெரிதும் எதிர்பார்ப்புடன் ஆலோசிக்கப்பட்டு வந்த விவாதத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ ரெஜிமென்ட் தரப்பில் களமிறங்கப் போகும் வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி இருந்தன. இந்த விவகாரம் காரணமாக குடும்பத்திற்குள் மோதல் நிலையும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரர் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.

இதனடிப்படையில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவா, அல்லது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவா களமிறக்கப்படுவார்கள் என்பது குறித்து கொழும்பு அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அண்மைக்காலமாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன. கோத்தபாயவும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

எனினும் இலங்கை – அமெரிக்க பிரஜாவுரிமைகளை கொண்டுள்ள கோத்தபாய இலங்கையில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவது சட்டரீதியான பிரச்சினையாக உருவெடுத்திருந்தது. ஆனாலும் தனது ஜனாதிபதி கனவை நிறைவேற்றிக் கொள்ள அமெரிக்க பிரஜாவுரிமையை இழக்க தயாராகி இருந்தார். இதற்கான தீவிர முயற்சியில் அவர் தற்போதும் ஈடுபட்டு வருகிறார்.

மறுபுறத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அரசியல் காய்நகர்த்தல்களை திரைமறைவில் மேற்கொண்டு வருகிறார்.

ராஜபக்ஷ ரெஜிமென்டை பிரதிபலிக்கும் வகையில் பொதுஜன பெரமுன என்ற அரசியல் கட்சி உருவாக்கப்பட்டு, மக்கள் மத்தியில் பிரபலமாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் செயற்பட்டு வருகின்ற போதிலும், அதன் முழுமையான அதிகாரம் பசில் ராஜபக்ஷவிடமே கொடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ ரீதியாக மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்த கோத்தபாயவும், அரசியல் ரீதியாக செயற்படும் பசில் ராஜபக்ஷவும் அடுத்த ஜனாதிபதி கதிரையை அலங்கரிக்க பேராசை கொண்டுள்ளனர். இதற்கான பயணத்தில் இருவரும் இருவேறு திசைகளில் தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் நேற்றைய தினம் இந்தியாவில் வைத்து மஹிந்த வெளியிட்டுள்ள கருத்து, தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வழமைக்கு மாறாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முப்பெரும் சக்திகள் தமது வேட்பாளர்களை களமிறஙக்கவுள்ளனர். ரணில் – மைத்திரி – மஹிந்த என்ற அடையாளங்களின் கீழ் மூன்று பிரதான கட்சிகள் தேர்தலில் போட்டியிடவுள்ளன.

பழம்பெரும் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இணையாக, கடந்த வருடத்தில் உதயமான பொதுஜன பெரமுனவும் களமிறங்குகின்றன.
ராஜபக்ஷ ரெஜிமென்டின் பூரண கட்டுப்பாட்டிலுள்ள பொதுஜன பெரமுன, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று, பிரதான கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது.

இந்நிலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தரப்பின் காய்நகர்த்தல்கள் எவ்வாறான தாக்கத்தை மேற்கொள்ளும் என்பது குறித்தே தற்போதைய விவாதமாக மாறியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சமகால பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ஏற்கனவே உறுதி செய்யப்பட்டதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்த நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் அவரையே களமிறக்கும் முயற்சிகளில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலைப்பாட்டில் இவர்களை ஈடு செய்யக் கூடிய வகையில் ராஜபக்ஷ ரெஜிமென்டின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிலங்கையின் கிராமபுற பகுதிகளில் மஹிந்த தரப்பிற்கு பெருமளவு ஆதரவு உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை சமகால அரசாங்கத்தின் கீழ் அறிமுகம் செய்யப்படும் வரிகள் மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக நாட்டு மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

இவ்வாறான சாதக நிலைப்பாட்டினை சரியாக பயன்படுத்தும் வகையில் மஹிந்த தரப்பின் செயற்பாடுகள் அமையவுள்ளன. அதற்கான சோதனை நடவடிக்கையாக கடந்த வாரம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணி பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தை அச்சப்படுத்தும் வகையில் பல்வேறு சவால்களை மஹிந்த தரப்பு விடுத்திருந்த நிலையில், அது முப்படையினரையும் திக்குமுக்காட வைத்திருந்தது. எனினும் குறித்த பேரணி படுதோல்வியில் முடிவடைந்தது.
ராஜபக்ஷ ரெஜிமென்டுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த பின்னடைவு ஏற்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த முரண்பாடுகளை நிரூபிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பேரணியை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் வழமைக்கு மாறாக பேரணியில் கோத்தபாய தனது படைப்பலத்துடன் களமிறங்கியிருந்தார்.

மஹிந்த – கோத்தபாய இரு பிரிவுகளாக சென்று ஒரு இடத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.
கொழும்பில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இந்தியா சென்றிருந்த மஹிந்த அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பேரணியில் கோத்தபாயவை மஹிந்த முன்னிலைப்படுத்தியிருந்த, நேற்றைய அறிவிப்பு மறைமுகமான கருத்தினை வெளிப்படுத்துவதாக கொழும்பு அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

சிரேஷ்ட அரசியல்வாதிகளான மைத்திரி மற்றும் ரணிலை தோற்கடித்து புதுமுகமாக அறிமுகமாகும் கோத்தபாய வெற்றி பெறுவாரா என்பது குறித்தே தென்னிலங்கை அரசியலில் கேள்விக் குறியாக மாறியுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *