புலிகளுடனும் புலம்பெயர் புலி அமைப்புக்களுடனும் இணைந்து தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு எப்போதும் புலிகளால் எந்த அச்சுறுத்தலும் இல்லை. அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா ஆகியோரின் உயிருக்கு எப்போதும் அச்சுறுத்தல் இல்லை. ஆனால் புலிகளுக்கு எதிராகச் செயற்படும் மஹிந்த ராஜபக் ஷவிற்கே இன்று உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பொது எதிரணியினரால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு தொடர்பில் இன்று அரசாங்கம் வேடிக்கையாக கருத்துகளை தெரிவித்து வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பை நீக்கவேண்டும் என்ற கருத்துகளையே தெரிவித்து வருகின்றார். ஆனால் உலகத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்கள் எவரும் இன்று முன்னாள் தலைவர்கள் என்ற நிலையில் வாழவில்லை.
ரஷ்ய அதிபர் புட்டின் அவ்வாறு இருந்தாலும் இன்றும் அவர் அதிபர் என்ற முழுமையான பாதுகாப்பில் இருக்கின்றார். ஆனால் முன்னாள் தலைவர் என்று இருக்கும் ஒருவர் மஹிந்த ராஜபக் ஷ மட்டுமேயாகும். அவ்வாறு இருக்கையில் அவருக்கு இன்றும் பல அச்சுறுத்தல்கள் உள்ளது.
ஆனால் ஜனாதிபதி பிரதமர் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் நாட்டில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என கூறுகின்றனர். அவ்வாறு கூறும் அனைவரும் இம்முறை ஜனாதிபதி தேர்தலின் போது புலிகளுடனும் புலம்பெயர் புலி அமைப்புகளுடனும் இணைந்தே தேர்தலில் வெற்றி பெற்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடமாகாண சபையினரும் எப்போதும் புலிகளுடன் கைகோர்த்து அரசியல் செய்பவர்கள். இன்று அவர்களின் கொள்கையால் நாட்டில் பிரிவினைவாதம் பலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறன நிலையில் புலிகளை ஆதரித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா ஆகியோரின் உயிருக்கு எப்போதும் அச்சுறுத்தல் இல்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ இலக்குவைக்கப்பட்டுள்ளார்.
புலிகளை அழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திய மஹிந்த ராஜபக் ஷ மக்களின் முழுமையான ஆதரவில் ஆட்சியமைத்தவர். அவர் நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயங்கள், அச்சுறுத்தல் என்னவென நன்கு அறிந்துள்ளார். ஆனால் இன்று ஆட்சிக்கு வந்தவர்களுக்கு அந்த சம்பவங்கள் தெரியாது. ஆரம்பத்தில் இருந்தே புலிகளுடன் உடன்படிக்கை செய்து நாட்டில் புலிகளை பலப்படுத்தி புலிகளுடன் நட்புறவை வைத்திருந்தவர்கள். அவ்வாறு இருக்கையில் அவர்களுக்கு தேசிய பாதுகாப்பு என்னவென்பது தெரியாது.
இன்று வடக்கில் நடக்கும் சம்பவங்கள், அரசியல் நடவடிக்கைகள் என்னவென்பது மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது. வடக்கில் புலிகளின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது. வடமாகாண சபையும் முதல்வரும் நாட்டில் பலமான பிரிவினைவாத கொள்கையை மேற்கொண்டு வருகின்றனர். இனிமேல் இவர்களுக்கு இடம்கொடுத்தால் நாட்டில் மீண்டும் ஒரு ஆயுத புரட்சி ஏற்படும். மக்கள் அதை தடுத்து நிறுத்த எம்முடன் கைகோர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.