(மருதூர் சுபைர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி,புத்தளத்தின் மூத்த அரசியல்வாதி நவவியின் இராஜினாமாவை அடுத்து காலியாகி உள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு பெற்ற வாக்குகளின் அடிப்படையில்,ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் இடையிலான புரிந்துணர்வினால் பெற்றுக்கொள்ளப்பட்டதே இந்தத் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் வன்னி, திருமலை,மட்டக்களப்பு, குருநாகல், புத்தளம்,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்டிருந்தது.
அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் போட்டியிட்டது. எனினும், சுமார் 33000வாக்குகளை மாத்திரமே பெற்று,ஒருசில ஆயிரம் வாக்குகளினால் ஆசனத்தை இழந்தது. வன்னி,திருமலை, மட்டக்களப்பு,அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடனான புரிந்துணர்வின் அடிப்படையில், பெற்ற தேசியப் பட்டியலுடன் ஐந்து ஆசனங்களை தம்வசம் வைத்திருக்கின்றது.
கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் புத்தளம் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் வாக்குகளினால் வெற்றிபெற முடியாமல் போன நவவிக்கு வழங்கப்பட்டது. இந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சுழற்சி முறையில் வழங்குவதற்கே கட்சி முடிவு செய்திருந்தது. அந்தவகையில், நவவி எம்.பி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் பாரம்பரியக் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் முதல் தடவையாக மக்கள் காங்கிரஸ் போட்டியிட்ட போதும், அக்கட்சிக்கு 33000வாக்குகள் கிடைத்தமை, அம்பாறை மாவட்ட அரசியலில் ஒரு திருப்பமாகக் கருதப்படுகின்றது.
யானையிலும், மரத்திலும் பழக்கப்பட்டிருந்த கைகள் மயிலுக்கு புள்ளடி போட்டன. கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,சமூகத்தின்பால் கொண்டிருக்கும் அக்கறை மற்றும் அவர் துணிச்சலாக சமூகப் பிர்ச்சினைகளுக்காக குரல்கொடுக்கும் பாங்கு உட்பட,ஏனைய சில கட்சியின் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளே இந்த வாக்குகளைப் பெறுவதற்கு காரணமாக இருந்தமை, அந்த நேரத்தில் அரசியல் ஆய்வாளர்களால் நோக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ, மயில் சின்னமோ அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் மத்தியில் எந்தவிதமான தாக்கமும் செலுத்தாத போதும், ரிஷாட் என்ற தனிமனித ஆளுமையே இத்தனை ஆயிரம் வாக்குகளை அந்தக் கட்சி குறுகிய காலத்துக்குள் அள்ளுவதற்கு காரணமாய் அமைந்ததென்று அரசியல் எதிரிகள் கூட மூக்கில் விரல் வைத்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களாக பல்வேறு கட்சிகளில் இருந்தும் அதிருப்தியுற்று அரசியல் நடத்தியவர்கள் போட்டியிட்டனர். கல்விமான்கள் முழுநேர அரசியல்வாதிகள் ஆகியோரும் இந்த வேட்பாளர் பட்டியலில் அடங்குவர்.
அமைச்சர் ரிஷாத்தின் அலை அம்பாறை மாவட்டத்தில் கட்டுக்கடங்காது இருந்தமையும்,இந்த வேட்பாளர்களின் தனிப்பட்ட ஆதரவும் இந்த வாக்குகளை ஒட்டுமொத்தமாக சேகரித்துத் தந்தது.
முதன்முதலாக போட்டியிட்ட கட்சி இத்தனை வாக்குகளைப் பெற்றதனாலேயே, அம்பாறை மாவட்டத்துக்கு தேசியப் பட்டியல் கொடுக்க வேண்டும் என்ற ஒருவகையான பிரமை அந்த மாவட்டத்தில் உருவாகி, அது படிப்படியாக வலுவடைந்தது.
தேர்தல் காலத்தில் கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியிதீனும் தேசியப் பட்டியலின் ஊடாக அம்பாறை மாவட்டத்துக்கு பிரதிநிதிதத்துவம் வழங்குவதாக அவ்வப்போது சிலாகித்ததாகக் கூறப்படுகின்றது.
தற்போது காலியாகியுள்ள இந்த எம்.பி பதவிக்கு அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்களிலும் உள்ள அரசியல் கனவான்கள் ஆலாய் பறக்கின்றனர். தமது ஆதரவாளர்களையும், தமக்குச் சார்பான இணையத்தளங்களையும்,முகநூல்களையும் பயன்படுத்தி “தாம்தான் இந்தப் பதவிக்கு அருகாதையானவர்” எனப் பல கோணங்களிலும் அறிக்கை விடுகின்றனர்.
மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தந்திகளையும். மகஜர்களையும் தமது ஆதரவாளர்களின் ஊடாக வழங்கி வருகின்றனர். அத்துடன்,தமது ஆதரவாளர்களை திரட்டி,மக்கள் காங்கிரஸ் தலைவரிடம் தூதனுப்பி வருக்கின்றனர்.
இதேவேளை, இந்த அரசியல் கனவான்கள் பொதுத் தேர்தலுக்குப் பின்னர், இந்த மாவட்ட மக்களுக்கு ஆற்றிய பணிகள் தொடர்பில் தமது மனச்சாட்சியைத் தொட்டுக்கேட்க வேண்டும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கீழான கைத்தொழில், வர்த்தக அமைச்சின் நிறுவனங்களின் மூலம் இவர்கள் பெற்றுக்கொண்ட பதவிகளால் அந்த மக்களுக்கு ஏதாவது நன்மை பெற்றுக் கொடுத்திருக்கின்றனரா?அல்லது அந்தப் பதவியை தமது சுகபோகங்களுக்காக பயன்படுத்தினரா? என்பதை மக்கள் மன்றில் இவர்கள் இப்போது கூறத் தயாரா?
பொதுத்தேர்தலுக்குப் பின்னர் இந்தக் கட்சியை அம்பாறை மாவட்டத்தில் வளர்த்தெடுப்பதற்கு இவர்கள் ஏதாவது திட்டங்களை வகுத்து செயற்படுத்தினார்களா?இளைஞர்களை கட்சியின்பால் திருப்பினார்களா?
சரி, அதுதான் போகட்டும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமூகத்துக்காக குரல் கொடுப்பதனால் வில்பத்து என்றும் முல்லைத்தீவு என்றும் இனவாதிகள் அவர் மீது அபாண்டங்களை பரப்பியபோது,அம்பாறை மாவட்ட மக்கள் காங்கிரஸ் ஜாம்பவான்கள் தாம்தான் என இப்போது தலைநீட்டி இருக்கும் இந்த முக்கியஸ்தர்கள், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு சார்பாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு வெகுஜனப் போராட்டம் ஏதாவது நடாத்தியிருக்கின்றார்களா?இல்லையேல் ஒரு அறிக்கை தானும் விட்டிருக்கின்றார்களா? இந்த வினாக்களை மக்கள் மன்றத்துக்கு விடுகின்றோம்.
இறுதியாக அம்பாறை மாவட்டத்தின் மக்கள் காங்கிரஸின் அடிமட்டப் போராளி என்ற வகையில் நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன்.
“பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கியே ஆக வேண்டும். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எமக்குத் தந்த வாக்கை நிறைவேற்றுவார். இந்தப் பதவியை இந்தப் பிரதேசத்துக்கு வழங்கினாலேயே எதிர்காலத்தில் கட்சியை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல முடியும். அதுமாத்திரமின்றி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சேவை எமக்குத் தேவை. ஆனால் இந்தப் பதவியை யாருக்கு வழங்குவது? என்பதிலேதான் கட்சித் தலைமை தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டும். அதன்மூலமே எமது வெற்றி தங்கியுள்ளது”