பிரதான செய்திகள்

இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்! ஐ.நாவில் மாட்டிக்கொண்ட இலங்கை

இலங்கையில் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் அரபு நாடுகள் கடும் அதிருப்தியடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க அந்த நாடுகள் தீர்மானித்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இன்று வெளியிட்டுள்ள செய்தி
தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கொழும்பிலுள்ள அதன் தூதுவர்களூடாக முழுமையான விவரங்களைத் திரட்டிவரும் இந்த நாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இதற்கெதிராக கூட்டு எதிர்ப்பை வெளியிட தீர்மானம் எடுத்துவருவதாக அரபு நாடொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பிலுள்ள உயர்மட்ட தூதுவரொருவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டங்களில் எதிர்த்து வாக்களித்தபோதும், இப்போது இலங்கையில் நடைபெறும் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை நோக்குகையில் அந்த ஆதரவு நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலை எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வன்முறைகள் குறித்து இலங்கை அரசும் முறையான தகவல்களை இராஜதந்திரிகளுக்கு வழங்காதிருப்பதன் மூலம் வன்முறைகள் தொடர்பிலான அரசின் உண்மைத்தன்மையை சந்தேகிக்கவேண்டியுள்ளதென்றும் மேற்படி தூதுவர் தெரிவித்தார்.

சவூதி அரேபியா, கட்டார், குவைத், பங்களாதேஷ், இந்தோனேசியா, மலேஷியா, ஐக்கிய அரபு இராச்சியம், பாகிஸ்தான், ஈரான்’ உட்பட்ட நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த வன்முறைகள் குறித்து தீவிர கரிசனை கொண்டிருப்பதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அடுத்த வாரம் விஜயமொன்றை மேற்கொள்ளவும் உத்தேசித்துள்ளனர்.

இந்த வன்முறைகளால் அரபு நாடுகளுடனான வர்த்தக உறவுகளும் பாதிக்கப்படக் கூடுமென சொல்லப்படுகிறது” என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல்

wpengine

ரிஸ்வி ஜவஹர்சாவின் ஏற்பாட்டில் இலவச மூக்குக்கண்ணாடி நாளை

wpengine

அரசியல் நிலையினை மாற்றி சின்னத்தை வைத்து அரசியல் செய்யும் சாணக்கியம்

wpengine