Breaking
Sun. Nov 24th, 2024
மற்றுமொரு  பாரிய அபிவிருத்தி திட்டம் தொடர்பில் சர்சைகளும்,இழுபறிகளும், கருத்து முரண்பாடுகளும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன.  ஏற்கனவே  வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் தொடர்பிலும், இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகம் தொடர்பிலும் இதேபோன்றே நிலைமைகள் ஏற்பட்டிருந்தன. இறுதியில் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை வடக்கு இழந்துவிட்டது. இரணைமடு யாழ்ப்பாணம் குடி நீர் திட்டத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே நடந்து வருகிறது. இது  வடகிற்கான ஒரு சாபக்கேடாக அமைந்துள்ளது.
இதேபோன்றே தற்போது கிளிநொச்சியில் வட மாகாணத்திற்கான விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையத்தை  அமைப்பதற்கு நெதர்லாந்து அரசின் நிதி உதவியுடன் கட்டிடங்கள், மருத்துவ உபகரணங்கள்,  தொழிநுட்ப பயிற்சிகள்  என்பவற்றுக்கும் சேர்த்து 2653701264.34 ரூபா நிதி ஒதுக்கீட்டில்   அமைக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி தொடர்பில் சில தரப்பினர்களுக்கிடையே  கருத்து முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளன.
குறித்த விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையம் கிளிநொச்சியில் அமைக்கப்படுகின்ற போது  அது வடக்கிற்கான  விசேட மையமாக மட்டுமன்றி இலங்கையில் உள்ள பெண்ணோயியல் மருத்துவமனைகளோடு ஒப்பிடும்போது அதி நவீன வசதிகளுடன் கூடிய  ஒரு விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையமாகக் காணப்படும். குறிப்பாக செயற்கை முறை கருத்தரித்தல் வசதிகள் உள்ளிட்ட பல நவீன மருத்துவ வசதிகள் கொண்ட ஒரு நிலையமாக இது  அமைக்கப்படும்.
இதற்கான திட்டங்கள் கடந்த காலத்தில் வடக்கு மாகாண சுகாதார  அமைச்சராக  ப. சத்தியலிங்கம், இருந்த போது மத்திய சுகாதார அமைச்சுடன் இணைந்து அமைத்திருந்தார்.
இந்த திட்ட முன்மொழிவானது தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சின் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டலின் படி  கிளிநொச்சி வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான வரைபினுள் உள்வாங்கப்பட்டு  கிளிநொச்சி  பிராந்திய சுகாதார திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கபட்டது. அது அங்கிருந்து வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி அங்கும் அனுமதி பெறப்பட்டு மத்திய சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்களின் அனுமதியோடு தேசிய திட்டமிடல் திணைக்களத்துக்கு அனுப்பட்டது அங்கும் இத்திட்டம் தொடர்பில் நன்கு ஆராயப்பட்டு குறித்த திட்டம் பாதீட்டுத் திணைக்களத்துக்கும் (Department of budgets), வெளியக வளங்கள் திணைக்களத்துக்கும் ( External Resource Department)  அனுப்பட்டிருந்த நிலையில்,  நெதர்லாந்து அரசு  நிதி வழங்கி இந்த விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையத்தை அமைக்க முன் வந்துள்ள நிலையிலேயே மாவட்டத்திற்குள் இப்பொழுது  சிலர் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
புதிதாக அமைக்கப்படவுள்ள  விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையம் தொடர்பில் அது எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளது, எந்தெந்த அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் முக்கியத்துவம் என்ன?  எதிர்காலத்தில்  அதன் பயன் எப்படியிருக்கும் போன்ற எவ்வித அடிப்படை தகவல்களும், அறிவுசார் சிந்தனைகளும் இல்லாத ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
குறித்த விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையத்ம் தொடர்பில் அண்மையில் கிளிநொச்சி வைத்தியசாலையில்  கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட  சிலர்  குறித்த பாரிய அபிவிருத்தி திட்டம் தொடர்பில் எந்த அடிப்படைத் தகவல்களும் இன்றி கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்திருந்ததாக சிரேஸ்ட மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
2005 காலப்பகுதியாக இருக்க வேண்டும் அப்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் தயாரிக்கப்பட்ட Master plan இல்   நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் வைத்திய நிபுணர்களது ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டு , சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு  2017 ல் விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையத்தையும் உள்ளடக்கிய கட்டம் இரண்டு ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுத் தற்போதைய திட்டம் தயாரிக்கப்பட்டது.  இதன்படி இந்த  விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையத்தை தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அமைந்துள்ள வளாகத்தில் அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதாவது ஒரே வாளகத்திற்குள் அனைத்து மருத்துவ  சேவைகளையும் வழங்க கூடிய வகையிலும், நிர்வாக நடவடிக்கைகளின் இலகு தன்மைகளை கருத்தில் எடுத்தும் இரண்டாவது கட்டத்தின் ( stage 2) முதலாவது பகுதி (Phase 1) அபிவிருத்தி திட்டமாக விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையமும் அவசர  மற்றும் விபத்து சேவை பிரிவும் உள்ளடக்கப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் குறித்த அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது விளக்கமின்மை காணப்படும் போது அது தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் ஒன்றுக்கு பல தடவைகள் ஒன்று கூடி  சாதாக பாதக தன்மைகளை ஆராயந்து எதிர்காலத்தையும் கருத்தில் எடுத்து பௌதீக நிலைமைகளையும் கவனத்தில் கொண்டு நிதிக்கொடையாளிகளுடன் கலந்துரையாடி தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி திட்டங்களை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவேண்டுமே தவிர பாரிய அபிவிருத்தி திட்டம் ஒன்றை நிறுத்தி விடவோ அல்லது வேறு இடங்களுக்கு திருப்பி விடவோ எவரும் காரணகர்த்தாக்களாக இருந்துவிடக் கூடாது என்பது  விடயம் அறிந்த பல துறைசார் நிபுணர்களின் கருத்தாக காணப்படுகிறது.
ஏற்கனவே இந்த திட்டம் தயாரிக்கப்பட்ட போது அதற்காக துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அவர்களின் ஆலோசனைகளும் கருத்துக்களும் இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்படவில்லை. இது திட்டமிடலின் அடிப்படைத் தத்துவத்துக்கே முரணானது. எனவே விடயம் அறிந்த திட்டமுன்மொழிவைத் தயாரித்த துறைசார்ந்தவர்களது அறிவுசார் கருத்துக்கள் இன்றி  உணர்ச்சிவசப்பட்டு தீர்மானங்கள் எடுக்கும் அவசர கலந்துரையாடல்கள் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள துறைசார் நிபுணர்கள், மருத்துவ துறை நிபுணர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரின் கருத்துக்களும் இது போன்ற ஒரு பாரிய அபிவிருத்தி திட்டம் என்பது மாவட்டத்திற்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதம் எனவும் அதனை பெற்று  அதிலிருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இந்த மாவட்டத்தை வளப்படுத்த வேண்டுமே தவிர வேறு சிந்தனைகள் இருக்க கூடாது எனத் தெரிவிக்கின்றனர்.
இந்த விசேட சிகிச்சை மையத்துக்கு  நெதர்லாந்து அரசு பெரும் நிதியை வழங்கவுள்ள நிலையில்  அதனை பெற்றுக்கொண்டு கிளிநொச்சி வைத்தியசாலையின்அடுத்தடுத்த அபிவிருத்தி திட்டங்களுக்கு  அரசின் வருடாந்த  வரவுசெலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடுகளை பெறுவதற்கு அதிகாரிகள் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதனை விடுத்து குறுகிய நோக்கங்களுக்காக ஒரு பாரிய அபிவிருத்தி திட்டத்தை எதிர்காலத்தை கருத்தில் எடுக்காது தடுக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பது யுத்தப் பாதிப்புக்களை முழுமையாக சந்தித்து அதிலிருந்து படிப்படியாக மீண்டுகொண்டிருக்கும் கிளிநொச்சி மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும் பெரும் துரோகமே.
கிளிநொச்சியில் வட மாகாணத்திற்கான விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையத்தை அமைப்பதற்கு இழுபறிகள் தொடரும் பட்சத்தில் குறித்த இந்த பாரிய அபிவிருத்தி திட்டத்தை  உடனடியாகவே ஏற்றுக்கொள்ள   வடக்கு மாகாணத்தில் ஒரு மாவட்டமும், வடக்கிற்கு வெளியே சில மாவட்டங்களும் தயார் நிலையில் இருப்பதனை  சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்  எனவும் இச் சந்தர்ப்பத்தில் நினைவுப்படுத்த வேண்டும்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *