Breaking
Fri. May 17th, 2024
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு ‘பாரிசவாதத்தை தடுப்போம்! குணமாக்குவோம்! வாருங்கள், சேர்ந்து நடப்போம்! எனும் தொனிப் பொருளில் இலங்கை தேசிய பாரிசவாத சங்கமும்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான மாவட்ட செயலகமும்,மட்டக்களப்பு மாநகர சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 2018- தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் 24 நாளை சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி பாடுமீன் பூங்காவிலிருந்து ஆரம்பித்து பிரதான வீதி வழியாக மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் வரை செல்லவுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  நரம்பியல் வைத்திய நிபுணரும், இலங்கை தேசிய பாரிசவாத சங்கத்தின் உதவிச் செயலாளருமான டாக்டர் ரி.திவாகரன் தெரிவித்தார்.

2018- தேசிய பாரிசவாத பாரிய நடைப்பயணம் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் …….

பாரிசவாதத்திற்கான தேசிய நடைப்பயணம் ஆண்டுதோறும் தென் இலங்கையின் கொழும்பு,கண்டி,காலி போன்ற முக்கிய நகரங்களில் நடைபெறும். இம்முறை கொழும்புக்கு வெளியே வடக்கு-கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளைய தினம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப் பாரிய நடைப்பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் ஆளுனர்,சுகாதார அமைச்சர்,சுகாதார பிரதியமைச்சர் உட்பட இலங்கை சுகாதார சேவைகளின் உயரதிகாரிகள் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகள் அனைத்தின் பங்களிப்புடன் இப் பாரிய பாரிசவாதத்திற்கான தேசிய நடைப்பயணம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இப் பாரிய நடைப்பயணத்தில் சுமார் 5000 பேர் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இப் பாத நடையின் இறுதியில் வருபவர்கள் அனைவருக்கும் அத்தியவசியமான தொற்றா நோய்கள் பற்றிய அறிவுரையும்,நோய் இருப்பதா? என்பதை பார்ப்பதற்கான இரத்த பரிசோதனையும்,இரத்த அழுத்தப் பரிசோதனையும் நடைபெறவுள்ளது.

குறித்த பாத நடையின் நோக்கம் பாரிசவாதம் தவிர்க்கப்படக்கூடியது,குணப்படுத்தக்கூடியது,உடனடியாக முதல் மூன்று மணித்தியாலங்களில் வைத்தியசாலையை நாடினால் முக்கியமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை நாடினால் சில வேளைகளில் உங்கள் பாரிசவாதத்தை முற்று முழுதாக குணப்படுத்தக் கூடிய அளவுக்கு ஊசி,மருந்துகளும் ,இதர சிகிச்சைகளும் ஆளணியினரும் உள்ளனர் என்பதை சொல்வதற்காகவே இப் பாத நடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பாரிசவாத்தை எவ்வாறு தவிர்க்கலாம்,வந்தவர்களுக்கு இன்னுமொறு முறை வராமல் எவ்வாறு தடுக்கலாம்,பாரிசவாதம் ஏற்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட உடல் ஊனங்களில் இருந்து எவ்வாறு விடுதலை பெறலாம் என்பனவற்றை சொல்வதற்கும் பல்வேறு வகையான மருத்துவ ஆளணியினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ,மட்டக்களப்பின் இதர அனைத்து வைத்தியசாலைகளில் இருந்தும் ஒன்று குழும ஆயத்தமாகவுள்ளனர்.

பாரிசவாத விழிப்புணர்வுக்காக முதல் முறையாக கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் மாபெரும் நடைப்பயணத்தில் எமது பாரிசவாத அமைப்புடன் இணைந்து பங்குபற்றி பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  நரம்பியல் வைத்திய நிபுணரும், இலங்கை தேசிய பாரிசவாத சங்கத்தின் உதவிச் செயலாளருமான டாக்டர் ரி.திவாகரன் மேலும் தெரிவித்தார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *