(ஊடகப்பிரிவு)
தமிழர்களையும், முஸ்லிம்களையும் முட்டிமோதச் செய்து, பிரச்சினைகளை உருவாக்குவதற்காக இனவாதிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேச சபையில் சொர்ணபுரி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் மௌலவி அஷ்ரப் முபாரக் (ரஷாதி) தலைமையில், சொர்ணபுரியில் இன்று (26) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான எம்.எம்.அமீன், செல்லத்தம்பு மற்றும் பீரிஸ் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மேலும் கூறியதாவது,
சிங்களச் சகோதரர்கள் மத்தியிலும், தமிழ்ச் சகோதரர்கள் மத்தியிலும் என்னை ஓர் இனவாதியாகக் காட்டுவதற்கு எத்தனையோ பிரயத்தனங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநிதியான நான், இந்தப் பிரதேசத்தில் இன, மத பேதங்கள் பாராது பணியாற்றி வருகின்றேன். தமிழ்ச் சகோதரர்கள் தமது நெஞ்சைத் தொட்டுக் கேட்டுப் பார்த்தல் இந்த உண்மை விளங்கும். எனது வெற்றிக்காக முஸ்லிம்கள் மாத்திரம் உழைக்கவில்லை. வன்னி மாவட்டத்திலுள்ள தமிழ், சிங்கள மக்கள் எனது வெற்றியில் பெரும்பங்களிப்பை நல்கி இருக்கின்றனர்.
இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, பௌத்த மதங்களைச் சேர்ந்த அனைத்து சமூகங்களும் எனக்கு வாக்களித்து நான் பாராளுமன்ற உறுப்பினராகுவதற்கு, தமது பங்களிப்பை நல்கியிருக்கின்றனர். இறைவனின் உதவியால் அமைச்சரவையிலே வட மாகாணத்தைச் சேர்ந்த ஒரேயொரு அமைச்சராக நான் பணியாற்றி வருவதை பொறுக்கமுடியாத அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர், என்னை வீழ்த்த வேண்டுமென்ற ஒரே நோக்கில் ஊருக்கு ஊர் ஊடுருவி, எமது கட்சி ஆதரவாளர்களை தமது சதி வலைக்குள்ளே அவர்களை சிக்கவைத்து, நமது ஒற்றுமையை சிதைக்க முற்படுகின்றனர்.
அவர்களின் இந்தச் சதி வலைக்குள்ளே நீங்கள் விழுந்துவிட்டால் பாதிக்கப்படப் போவது, ஊரின் பிரதிநிதித்துவமே. அவர்களின் வலைக்குள் வீழ்ந்து முரண்பட்ட பாதைகளிலே பயணிக்கும் ஒருசில சகோதரர்களுக்கு இந்த உண்மையை எடுத்துக்கூறி, அவர்களை சரியான தடத்தில் கொண்டுவர முயற்சியுங்கள். இந்தப் பிரதேசத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் காலாகாலமாக இன ஐக்கியத்துடனேயே வாழ்ந்து வாருகின்றனர்.
அரசியல் அதிகாரத்தை நாங்கள் கொண்டிருப்பதனால் அவர்களை நெறிப்படுத்தி, முறையான திட்டங்களை வகுத்து, இந்தப் பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக உழைத்து வருகின்றோம்.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் நமது ஒற்றுமையீனத்தால் 16 வாக்குகள் குறைவடைந்ததனால், எமது கட்சிக்கான இரண்டாவது பிரதிநிதித்துவத்தை இழக்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டது.
நாங்கள் இதயசுத்தியுடன் தமிழ், முஸ்லிம் உறவை விரும்புபவர்கள். தமிழர்களை எமது சகோதரர்களாக நேசிப்பவர்கள். எம்மிடம் பாசாங்கு கிடையாது, முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று ஒரு பாஷையையும், தமிழ் கிராமங்களுக்கு வந்து இன்னுமொரு பாஷையையும் கூறுகின்ற அரசியல்வாதிகளின் பின்னால் நீங்கள் அலைந்து திரியாதீர்கள். நடித்துக்கொண்டிருப்பவர்களை இனங்கண்டு கொள்ளுங்கள்.
நாங்கள் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டங்களையும், மக்கள் பணிகளையும் நேரடியாகத் தடுத்து நிறுத்த துப்பில்லாதவர்கள், இனவாதிகளிடம் எம்மை பிழையாகக் காட்டிக்கொடுத்து, அவர்கள் மூலம் அந்த நல்ல பணிகளை நிறுத்தி விட முயற்சிக்கின்றனர். அதன்மூலம் தாங்கள் அரசியல் இலாபம் பெற முடியுமென ஆசைப்படுகின்றனர்.
இன்று உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச மட்டத்திலும் எம்மை வீழ்த்துவதற்கான ஒரு பாரிய சதி முயற்சி அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
உங்கள் பிரதிநிதியான என்னை வீழ்த்துவதன் மூலம், இந்தப் பிரதேச மக்களை அனாதரவாக்கி, தமது கைங்கரியங்களை நிறைவேற்ற முடியுமென நப்பாசை கொண்டவர்களின் திட்டமிட்ட முயற்சிகளுக்கு ஒருபோதும் துணைபோக வேண்டாம். ஒருகாலத்திலே வன்னி மாவட்டத்திலே அரச வேலைவாய்ப்பு என்பது கானல்நீராகவும், அரிதாகவுமே இருந்தது. அரசியல் அதிகாரம் எமக்குக் கிடைத்த பின்னர், அந்த நிலையை மாற்றி, அதிகாரங்களைப் பயன்படுத்தி இறைவனின் துணையுடன், ஆசிரியர் நியமனம் உட்பட அரச நியமனங்கள் பலவற்றை வழங்கியிருக்கின்றோம்.
சில கிராமங்களில் ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் அரச ஊழியர்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, நீங்கள் எமது கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், உங்கள் வாழ்க்கையை வளமாக்கவே உதவும் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.