இதுகுறித்து பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி சிங்கள ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறி உள்ளூராட்சித் தேர்தல்கள் மாதக்கணக்கில் பிற்போடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு வேறு பல காரணங்களும் முன்வைக்கப்படுகின்றது.
தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு பணிகள் கடந்த ஜனவரி, ஏப்ரல் என கால எல்லை நீண்டுகொண்டு போய், தற்போது ஆகஸ்டில் முடிவடையும் என்று தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதற்கான உறுதியான காலஎல்லை குறிப்பிடப்படவில்லை.
அரசாங்கம் உண்மையில் ஜனநாயகத்தை மதிக்கும் ஒன்றாக இருக்குமானால் தொகுதி எல்லை சிக்கல்கள் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களையேனும் முதலில் நடத்தியிருக்க வேண்டும். ஏனைய மன்றங்களின் தேர்தல்களை பின்னர் நடத்தியிருக்க முடியும்.
கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்துவது ஜனநாயகத்தை பாதிக்கும் என்ற போதிலும், தேர்தல்களை பிற்போடுவது அதனை விட ஆபத்தானது. பொதுமக்களின் ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.
எனவே இதனை வலியுறுத்தும் வகையில் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் ஏனைய அமைப்புகளின் முக்கியஸ்தர்களுடன் இணைந்து தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தவுள்ளோம் என்றும் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.