Breaking
Mon. Nov 25th, 2024

(முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது)

சில அரசியல்வாதிகளின் தேர்தல் வியூகமும், அதனால் உருவாகின்ற பிரதேசவாத சிந்தனைகளும்.
தேர்தலில் தாங்கள் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கோடு சில அரசியல்வாதிகள், அவர்களை சுற்றியுள்ளவர்கள் மூலமாக தங்களின் ஊருக்கே பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரத்தினை தங்களது ஊர்களில் மிகவும் இரகசியமாக மேற்கொள்வது வழக்கமாகும்.

இந்த பிரச்சாரமானது பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர் மற்றும் பிரதேசசபை தவிசாளர், மேயர் ஆகிய பதவியினை தாங்கள் அடைந்து கொள்வதற்காகவும், தங்கள் ஊருக்கு அரசியல் அதிகாரம் என்ற பிரச்சாரத்தின் மூலம் பிரதேசவாதத்தினை தூண்டி, தங்கள் ஊருக்கே குறித்த பதவியினை பெறவேண்டும் என்ற கோசத்தினால் மக்கள் உசுப்பேத்தப்படுவது கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நடைபெற்று வருகின்ற விடயமாகும்.
இப்படியான பிரதேசவாத சிந்தனைகள் அரசியல்வாதிகளிடம் தோன்றாது விட்டாலும், அவர்களை சுற்றி இருக்கின்றவர்கள் அரசியல்வாதியுடன் நெருக்கத்தினை அதிகரித்துக் கொள்வதற்காக, நல்லது செய்கின்றோம் என்ற போர்வையில் இவ்வாறான சமூக விரோத ஆலோசனைகளை வழங்குகின்றார்கள்.

எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கோடு இருக்கின்ற சில அரசியல்வாதிகள், என்ன விலை கொடுத்தாவது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல தந்திரோபாயங்களை மேற்கொள்வது வழக்கமாகும்.
அதற்காக தங்களது ஊரில் உள்ள வாக்குகளை மொத்தமாக சுருட்டிக்கொள்ளும் நோக்கோடு தீய பிரதேசவாத சிந்தனையை மட்டுமல்ல, தனக்கு இடையூறாக இருக்கின்றவர்களை கொலை செய்தாவது தேர்தலில் தான் வெல்ல வேண்டும் என்றே செயல்படுகின்றார்கள்.

இறுதியில் வெற்றிபெறுகின்ற வேட்பாளர் அரசியல் அதிகாரமுள்ள தனது பதவிக்குரிய அனைத்து உத்தியோகத்தர்களின் நியமனங்களையும் தனது ஊரை சேர்ந்தவருக்கு அல்லது தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு வளங்கிவிடுகின்றார்.

இதன் காரணமாக அரசியல் அதிகாரம் இல்லாத ஊரில் உள்ள மக்கள் குறிப்பிட்ட அதிகாரமுள்ள அரசியல்வாதியை சந்திப்பதிலும், அவர் மூலமாக தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதிலும் பாரிய சிரமங்களை மேற்கொள்கின்றார்கள்.
அதிகாரம் உள்ள அரசியல்வாதியை சந்திப்பதென்றாலும் பல தடவைகள் அலைந்து திரியவேண்டியநிலை. அப்படித்தான் சந்தித்தாலும் தங்களது ஊரவர்களுக்கு வழங்குகின்ற முக்கியத்துவம் வெளி ஊரவர்களுக்கு வழங்குவதில்லை.

குறித்த அரசியல்வாதியோ அபிவிருத்திக்காக ஒதுக்கப்படுகின்ற தொண்ணூறு வீதமான நிதிகளையும், தொழில் வாய்ப்புக்களையும் தங்களது ஊருக்கே வழங்குகின்றார்கள். இவ்வாறான பிரதேசவாதத்தினால் அரசியல் அதிகாரம் இல்லாத பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் தங்களது ஊருக்கும் அரசியல் அதிகாரம் வேண்டும் என்ற கோசத்தினை முன்வைக்கின்றார்கள்.
எனவேதான் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக வகுக்கப்படும் பிரதேசவாத சிந்தனைகள் தேர்தலுடன் முடிந்துவிடுவதில்லை. மாறாக அது தொடர்ந்து ஊர்களுக்கிடையில் கசப்புணர்வுகளை உருவாக்கி இறுதியில் சமூக ஒற்றுமையை சீரழிக்கின்றது.

அதனால் சமூக சீரழிவுக்கும், பிளவுகளுக்கும், பிரிவினைகளுக்கும் சில அரசியல்வாதிகளினதும், அவர்களை சுற்றி உள்ளவர்களினதும் தேர்தல் வியூகங்களே காரணமாக அமைந்துவிடுகின்றது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *