உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை இன்று(22) பிறப்பித்துள்ளது.
இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலமான உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் செயலகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி, தேர்தல் தொடர்பான வேட்பு மனுத் தாக்கலுக்கான அறிவிப்பை எதிர்வரும் 27ஆம் திகதி வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த பின்னணியில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவினால் வேட்பு மனு தாக்கலுக்கான அறிவிப்பை வெளியிடுவதில் தேர்தல்கள் ஆணைக்குழு சிரமத்தை எதிர் நோக்கியுள்ளது.
இந்த வேட்பு மனு தொடர்பான அறிவிப்பு குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் பின்னரே வேட்பு மனு தாக்கலுக்கான அறிவிப்பு குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்பிரகாரம் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளதாகவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்று தீர்மானமொன்றை எட்டவுள்ளதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதியில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.