Breaking
Sat. May 4th, 2024

கொழும்பு அதியுயர் மறை மாவட்டத்தின் துணை ஆயராக இருந்த பேரருட் கலாநிதி வ்பிடெயிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் மன்னார் மறைமாவட்டத்திற்கான புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் தூய பேதுருவானவர் சதுக்கத்தில் வழமையாக நடைபெறும் புதன் மூவேளைச் செபவேளை இன்று நடைபெற்றபோது வத்திக்கான் நேரப்படி நண்பகல் 12.00 மணிக்கு (இலங்கை நேரம் மாலை 04.30 மணி) இந்தப் புதிய நியமனத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதேநேரம் இன்று மாலை 04.30 மணிக்கு மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் ஒன்று கூடிய குருக்கள், துறவிகள் பொது நிலையினருக்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார் அதற்கான உத்தியோபூர்வமான செய்தியைத் தெரிவித்தார்.

அவ்வேளையில் மன்னார் மறை மாவட்டத்தின் அனைத்துப் பங்குகளிலும் உள்ள ஆலய மணிகள் பேரொலி எழுப்பி இச் செய்தியை அனைவருக்கும் அறிவித்தன.
பேரருட் கலாநிதி வ்பிடெயிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் 1948ம் ஆண்டு வைகாசி மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.

பின் 1951ஆம் ஆண்டு கொழும்பு பாமன்கடைப் பகதியிலும், பின்னர் 1955ஆம் ஆண்டு கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியிலும் தமது வாழ்விடத்தை பெற்றோரோடு சேர்ந்து அமைத்துக் கொண்டார்.

1953ஆம் ஆண்டு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் தூய டிலாசால் அருட்சகோதரர்களின் நெறிப்படுத்தலில் இயங்கும் தூய பெனடிக்ற் கல்லூரியில் தனது கல்விப்பயணத்தை ஆரம்பித்தார்.

இவர் பொறியியலாளரான திரு.சேவியர் பஸ்ரியன் பெனாண்டோவுக்கும், திருமதி.ஞானசொரூபி பெனாண்டோவுக்கும் மகனாகப் பிறந்தார்.

இவருடைய வழித்தோன்றல்கள், விசுவாசம் செழித்தோங்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி மறைமாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள்.

தனது ஆரம்பக்கல்வியை முடித்தபின் தற்போதைய கர்தினால் மேன்மைமிகு மல்கம் றஞ்சித் ஆண்டகையோடு கொழும்பு தூய அலோசியஸ் சிறிய குருமடத்திற்குள் பாதம் பதித்தார்.

அதன்பின் கண்டி தேசிய குருமடத்தில் மெய்யியல் கல்வியை முடித்தபின் 1969ம் ஆண்டு ஆவணிமாதம் உரோமா புரியிலுள்ள மறைபரப்பு பணி பல்கலைக்கழகத்தில் இறையியல் பயில அனுப்பப்பட்டார்.
1972ம், 1974ம் ஆண்டுகளில் இறையியல் துறையில் இனமானி, முதுமானி இலக்கை அடைந்தார். இவர் 1973ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் உரோமாபுரியில் நற்செய்திப் பேராயம் ஆரம்பிக்கப்பட்டு 350ஆம் ஆண்டு நிறைவுப் பெருவிழாக் கொண்டாட்ட நாளில் 19 நாடுகளிலிருந்து தெரிவான 38 அருட்சகோதரர்களோடு குருவாகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.

1974ஆம் ஆண்டு தாய் மண்ணுக்கு வந்த இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்கள் கொழும்பு மறைமாவட்டத்தின் பல பணித்தளங்களிலும் பணியாற்றியுள்ளார்.
1989 தொடக்கம் 1991வரையான காலப்பகுதிகளில் கண்டி தேசிய குருமடத்தின் இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.

2012ம் ஆண்டு மாசிமாதம் 11ம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனை தூய லூசியா பேராலயத்தில் கொழும்பு துணை ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

இதேவேளை மன்னார் மறை மாவட்டத்திற்கு மன்னாரைச் சேர்ந்த ஒருவரையோ, அல்லது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரையோ ஆயராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்ததுடன், இந்த விடயத்தில் தொடர் இழுபறி நிலைகள் காணப்பட்டன.

இந்த நிலையில் கொழும்பைச் சேர்ந்த பேரருட் கலாநிதி வ்பிடெயிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இன்று மன்னார் மாவட்டத்திற்கான புதிய ஆயராக நியமனமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *