இலங்கை அணிக்கு எதிரான முதல் இருபதுக்கு -20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் அபரா வெற்றிபெற்றுள்ள நிலையில் இன்று 2 ஆவது இருபதுக்கு – 20 போட்டி இடம்பெறவுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்று வருகின்றது.
இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தது. ஒருநாள் தொடரை 5-0 என பாகிஸ்தான் அணி கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட இருபதுக்கு – 20 தொடரின் முதலாவது போட்டி நேற்று அபுதாபியில் இடம்பெற்றது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தானின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் பறிகொடுத்தனர்.
18.3 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
சீக்குகே பிரசன்ன ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் சமரவிக்கிரம 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஹசன் அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
103 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கையடைந்து 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சொகிப் மாலிக் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் மொஹமட் ஹாபிஸ் ஆட்டமிழக்காது 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சன்ஞய 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்த 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரில் பாகிஸ்தான் அணி 1- 0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில், 2 ஆவது இருபதுக்கு – 20 போட்டி இன்று அபுதாபியில் இடம்பெறவுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இருதியுமான இருபதுக்கு – 20 போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் கடாபி மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.