வடகொரியாவின் அரச சார்பு இணைய ஊடுருவல் நிறுவனம் ஒன்று இலங்கை உட்பட்ட சர்வதேச ரீதியாக நிதி நிறுவனங்கள் மீது இணையத்தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக சந்தேகிக்கப்படுகிறது.
லாசரஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ள இந்தக்குழு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட தாய்வான் வங்கி ஊடுருவல் சம்பவத்திலும் தொடர்புக்கொண்டிருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
வங்கிகளின் சுவிப்ட் என்ற வலையமைப்பின் மூலம் பணம் திருடப்பட்டு அவை இலங்கை மற்றும் கம்போடியா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் வங்கி ஒன்றுக்கு 30மில்லியன் ரூபாய்கள் மாற்றப்பட்டிருந்தன.
இதனையடுத்தே குறித்த நிதியை பெற்றுக்கொண்டதாக கூறப்பட்டு இலங்கையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில், தாய்வான் வங்கியில் இணையம் மூலம் திருடப்பட்ட மேலும் 60மில்லியன் ரூபாய்கள் பரிமாற்றப்பட்ட விதம் மற்றும் நாடு குறித்து இன்னும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த இணையவழி பணம் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஐபிடி டைம்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது