பிரசன்ன விதானகே தயாரித்த ‘உசாவிய நிஹன்டய்’ ‘நீதிமன்றத்தில் அமைதி’ சிங்கள திரைப்படம் நீதிமன்றத்தின் மூலம் காட்சிப்படுத்தலுக்காக தடையை எதிர்நோக்கியுள்ளது.
இந்த திரைப்படம் ஒக்டோபர் 6ம் திகதி திரையிடுவதற்கு தயாராக இருந்த நிலையில் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட கோரிக்கை ஒன்றின் மூலம் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ம் திகதி இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
‘நீதிமன்றத்தில் அமைதி’ திரைப்படம், சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது கணவனுக்கு பிணை பெறுவதற்காக அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு பாலியல் இலஞ்சம் கொடுத்த ஒரு மனைவியின் உண்மைக் கதையை வைத்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.
லெனின் ரத்னாயக்க என்ற முன்னாள் நீதிபதி மஹவ நீதிமன்றில் கடமையாற்றிய போது குறித்த பெண்ணை வாக்கு மூலம் ஒன்றை பெறுவதற்காக என்று விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் இழைத்ததாக விக்டர் ஐவன் தனது நூலில் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளார்.
குறித்த நீதிபதியின் இந்த கீழ்த்தரமான, சமூக விரோத செயலுக்கு சட்டத்தரணிகள் சிலரும் உடந்தையாக செயற்பட்ட அதிர்ச்சியான தகவலையும் ‘உசாவிய நிஹன்டய்’ எடுத்துச் சொல்கிறது.
இலங்கையின் நீதித்துறையில் இருள்படிந்த சம்பவங்களை ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன் தனது ‘நொனிமி அரகலய’ என்ற நூலில் விரிவாக எழுதியிருந்தார். 2002ம் ஆண்டு வெளிவந்த இந்த நூல் 477 பக்கங்களைக்கொண்டது.
இந்த நூல் வெளியிட்ட உண்மையான தகவல்களின் அடிப்படையிலேயே பிரசன்ன விதானகே இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.