Breaking
Sat. Apr 27th, 2024

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் அசாம் மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார். பிரச்சார கூட்டங்களில் அவர் பேசியதாவது:

அசாம் மாநிலத்தையும் இங்குள்ள மக்களையும் பா.ஜ.க. அவமதித்து வருகிறது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி இங்கு ஏற்பட்டால் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இங்கு நிலைநாட்டியுள்ள அமைதி மற்றும் மாநில வளர்ச்சிக்கு ஆபத்து நேர்ந்துவிடும்.

இந்த முறை மதவாத சக்தியான பா.ஜ.க., அசாம் கணபரிஷத் என்ற பிரிவினைவாத சக்தியுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. இதனால், அசாம் மாநிலத்தின் ஒன்றுபட்ட கலாச்சாரத்துக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னர் இவர்கள் இங்கு ஆட்சி செய்தபோது சட்டம்-ஒழுங்கு மீறலும், பயங்கரவாதமும் தலைவிரித்து ஆடின.

தருண் கோகாய் தலைமையிலான 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் இந்த அக்கிரமங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, அமைதியான, வளர்ச்சியடைந்த மாநிலமாக அசாம் முன்னேறியது. காங்கிரஸ் கட்சி அனைத்துதரப்பு மக்களுக்காகவும் பாரபட்சமின்றி உழைப்பதால் காங்கிரஸ் தொண்டர்களை குறிவைத்து பா.ஜ.க. தாக்குதல் நடத்தி வருகின்றது.

மத்திய அரசை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்தபோது, அசாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கான நிதியுதவியை தற்போது மோடியின் அரசு குறைத்து விட்டது. பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் அசாம் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு தகுதியையும் தற்போதைய மத்திய அரசு பறித்து விட்டது.

அசாமின் வளர்ச்சிக்கென அமைக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற குழுவையும் கலைத்துவிட அவர்கள் முடிவு செய்து விட்டனர். அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உண்டான சேதங்களுக்கான உரிய இழப்பீட்டு நிதி வழங்கவும் மத்திய அரசு மறுத்து விட்டது.

டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கியதாக தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி, தேயிலை விவசாயிகளை வஞ்சித்து விட்டார். அசாம் தேயிலையைப்பற்றி வெகு பிரமாதமாக புகழ்ந்து பேசிய மோடியின் ஆட்சியில் தேயிலை விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது.

(முன்னர் தேர்தல் பிரசாரத்துக்காக இங்கு வந்திருந்த மோடி, புத்துணர்ச்சி அளிக்கும் அசாம் தேயிலையால் தயாரிக்கப்பட்ட டீயின் மூலம் எனது ஆரம்பகாலத்தில் மற்றவர்களுக்கு புத்துணர்ச்சி அளித்தேன். அதனால், அசாம் மக்களை என்னால் மறக்கவே முடியாது. என் மனதில் அவர்களுக்கு நீங்காத இடம் உண்டு என்று பேசி இருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது)

தற்போது, தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளும் மலைவாழ் மக்களும் தங்களுக்கான ‘நல்ல காலம்’ எப்போது வரும்? என்று ஏக்கத்துடன் கேட்கின்றனர்.

சிறுபான்மையினத்தவர்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கான வளர்ச்சி நிதியையும் இந்த அரசு குறைத்து விட்டது. அசாம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்ட உணவுப்பொருட்களும் கிடைக்காமல் செய்ய தற்போதைய மத்திய அரசு முயற்சித்தது. அந்த திட்டத்தை தடுத்து நிறுத்திய முதல் மந்திரி தருண் கோகாய் மற்றும் காங்கிரஸ் தலைவர் அஞ்சன் தத்தா ஆகியோரை நான் மனதார பாராட்டுகிறேன்.

மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றபிறகு விலைவாசி உயர்வு ஏழை மக்களின் முதுகை உடைக்கிறது. அத்தியாவசிய மருந்துகளைகூட சராசரி மக்கள் வாங்க முடியாத நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *