இலங்கையின் 43ஆவது தேசிய விளையாட்டு விழா இம்மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மாத்தறையில் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு வடக்கு, கிழக்கில் இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் தேசிய ஒலிம்பிக் தீப பவனி நேற்று முன்தினம் சனிக்கிழமை(2) வவுனியாவில் இருந்து மன்னாரை வந்தடைந்தது.
நேற்று(3) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் தேசிய ஒலிம்பிக் தீப பவனியுடன் ஆரம்பமான ஊர்வலம் மன்னார் பிரதான வீதியூடாக சென்று பின் மன்னார் நகரில் இருந்து முசலி பிரதேச செயலகத்தை வந்தடைந்தது இதன் போது பிரதேச செயலத்தில் இடம்பெற்ற விஷேட நிகழ்வுகளின் பின்பு புத்தளம் நோக்கி தேசிய ஒலிம்பிக் தீப பவனி முன் நகர்ந்தது.
குறித்த பவனியின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவுடன் இணைந்து மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரிகள், முசலி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் திணைக்கள அதிகாரிகள் விளையாட்டு வீரர்கள்,உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.