Breaking
Sat. Apr 20th, 2024

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொலை சம்பவத்தில் இலுப்பைக்கடவை பொலிஸார் தமது கடமையை சரியாக மேற்கொள்ளவில்லை என சட்டத்தரணி எஸ்.டினேசன் தெரிவித்துள்ளார்.


குறித்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.


இந்த வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சந்தேகநபர் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.டினேசன் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


மன்னார் மாந்தை மேற்கில் கடந்த 3ம் திகதி (3-11-2020) இரவு கிராம அலுவலகர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் 4ம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் குறித்த சடலம் மீட்கப்பட்டமை தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக சட்ட வைத்திய அதிகாரிக்கு பாரப்படுத்தப்பட்டு, குறித்த சடலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.


இந்த நிலையில் குறித்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரை இலுப்பைக்கடவை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இன்றைய தினம் சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.


மேலும் கடந்த சனிக்கிழமை குறித்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டதாகக் கூறி, மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


சந்தேக நபர்களில் ஒருவர் கள்ளியடி என்ற இடத்தில் அரைக்கும் ஆலை ஒன்றின் உரிமையாளர், இரண்டாவது சந்தேக நபர் குறித்த அரைக்கும் ஆலையில் கடமையாற்றுகின்றவர் என தெரிய வருகின்றது.


குறித்த அரைக்கும் ஆலையில் சம்பளத்திற்கு கடமையாற்றிய இரண்டாவது சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அரைக்கும் ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் மேல் அறிக்கையினை மன்றில் தாக்கல் செய்து குறித்த சந்தேக நபர், பொலிஸாரால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.


இலுப்பைக்கடவை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,
குறித்த ஆலையின் உரிமையாளரான சந்தேக நபர் கூராய் பகுதிக்கு சென்ற போது, ஆலையில் கூலிக்கு வேலை செய்த குறித்த நபரை அழைத்து சென்றதாகவும், தான் அவருடன் சென்றதாகவும், தன்னை குறித்த இடத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் நிறுத்தி விட்டு மண்வெட்டி மற்றும் அலவாங்கை கொண்டு சென்றதாகவும் குறித்த நபர் பொலிஸாரின் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.


ஆனால் உயர் அதிகாரிகள் மற்றும் உயர் மட்டங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற அழுத்தங்களுக்கு அமைவாக குறித்த வழக்கின் சந்தேக நபரை எவ்வாறு கைது செய்ய வேண்டும் என்று இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.


குறித்த கொலையுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்ய பலதரப்பட்டவர்களிடம் இருந்து இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரை உட்புகுத்த வேண்டும் என்பதன் அடிப்படையில், குறித்த வழக்கு விசாரணையின் சந்தேக நபரை உட்புகுத்தி உள்ளனர்.


வழக்கு விசாரணையின் இரண்டாவது சந்தேக நபரை அரச சாட்சியாக மாற்றியுள்ள நிலையில், குறித்த நபர் தற்போது மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் சயன அறையில் வைத்து குறித்த வழக்கு விசாரணை தொடர்பான உண்மையினை மன்னார் நீதவானிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.


இதன் போது இலுப்பைக்கடவை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மேலதிக அறிக்கையில்
குறித்த அரைக்கும் ஆலையில் வேலை செய்யும் நபரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், சட்டத்தரணிகள் மற்றும் நீதவான் முன்னிலையில் குறித்த நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த முறைப்பாடு இலுப்பைக்கடவை பொலிஸாரின் தூண்டுதலுக்கு அமைவாகவே குறித்த வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது எனவும், தான் இலுப்பைக்கடவை பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு சித்திரைவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தனது ஆடையினை முழுமையாக அகற்றி இரும்புக் கம்பியினால் தாக்கி, குறித்த வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், தன்னை கடுமையாக தாக்கி பொலிஸார் கூறியதற்கு அமைவாகவே தான் ஏற்றுக்கொண்டதாகவும் குறித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.


குறித்த சந்தேக நபர் வழக்கில் தவறான விடயங்களை உட்சேர்த்து குறித்த வழக்கின் சந்தேக நபராக கொண்டு வரப்பட்டுள்ளார்.


எவ்வித தொடர்பும் இல்லாத நபரை குறித்த வழக்கு விசாரணைகளில் உட் புகுத்ததன் காரணமாக உண்மையில் குறித்த கொலையை மேற்கொண்ட நபர் யார் என்று கண்டு பிடிப்பதில் இலுப்பைக்கடவை பொலிஸார் தமது கடமையை சரியாக மேற்கொள்ளாது, சந்தேகமாக ஒரு நபரை குறித்த வழக்கு விசாரணையில் உட்புகுத்தி உள்ளனர்.


வழக்கு விசாரணையை திசை திருப்பும் வகையில் செயற்பாடுகள் இடம் பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி உண்மையான கொலையாளியினை கண்டு பிடிப்பதில் இருந்து பொலிஸார் தமது கடமையில் இருந்து தவறி உள்ளனர்.


தற்போது கொலை செய்யப்பட்டுள்ள கிராம அலுவலகர் மாந்தை மேற்கில் மண் அகழ்விற்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அந்த நிலையில் அவருக்கு எதிராக அப்பிரதேசத்தில் பலர் இருந்துள்ளனர். யாரோ ஒருவர் தமது பழியினை தீர்ப்பதற்காக குறித்த நபரை சந்தேக நபராக உட்புகுத்து தாங்கள் தப்பித்துக் கொள்ள முனைந்துள்ளனர்.


குறித்த விடயம் இரண்டாவது சந்தேக நபரினால் மன்னார் நீதவானிடம் சயன அறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


குறித்த நபர் சந்தேகத்தின் அடிப்படையில் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாது சந்தேக நபரான அரச சாட்சியாக மாறிய நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி எஸ்.டினேசன் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் சார்பாக சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *