ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முஹமட் சரிப் அனிஸினை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றுமாலை வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவரும், கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான, பொதுக்கொள்கைத் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளரும், அரசியல் ஆய்வாளருமாகிய முஹமட் சரீப் அனிஸ், அமைச்சர் றிசாட் பதியுதீனின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வவுனியா மாவட்ட மக்கள், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், நலன்விரும்பிகள் என அனைவரும் ஒன்றிணைந்து இன்றைய தினம் இந்த கௌரவிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
மேலும் அதிதிகளாக வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் வி.ஜெயதிலக , அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரகுமான், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்தோடு, நாச்சியாதுவ உதவி பிரதேச செயலாளர் ஜெ.மஹ்ரூப், வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.