மாகாணசபை தேர்தலை தனித்தனியாக நடத்தாமல் அனைத்து மாகாணசபைகளினதும் தேர்தலை ஒரே தினத்தில் நடாத்தும் வகையில் அரசியல் யாப்பு மற்றும் மாகாண சபைகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.
அரசியல் யாப்பிலும், மாகாணசபைச் சட்டத்திலும் இவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் தேர்தல் உட்பட அனைத்து மாகாண சபைகளின் தேர்தலும் ஒரே தினத்தில் நடாத்தப்படும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மாகாண சபைகளின் தேர்தல்கள் தனித்தனியாக நடாத்தப்படாமல், ஒரே தடவையில் நடத்தப்பட வேண்டுமென்ற நடைமுறை இருந்தாலும், கடந்த காலங்களில் மாகாண சபை தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்பட்டன. இதனால் பெருமளவு நிதி, மனிதவளம் மற்றும் வளங்கள் பெருமளவில் வீண்விரயம் செய்யப்பட்டன. மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அரச சேவைகள் தாமதங்களுக்குள்ளாகின என பிரதமர் இந்த ஆலோசனையை அமைச்சரவையின் முன்வைத்து விளக்கமளித்தார்.
மேலும் மாகாணசபைகளின் தேர்தல் தனித்தனியாக நடாத்தப்படுவதால் தேர்தல் ஊழல்கள், அரச சொத்துக்களின் முறையற்ற பாவனை என்பன அதிகரித்துக் காணப்படுகின்றன. எனவே மாகாண சபைகளின் தேர்தலை ஒரே தினத்தில் நடாத்துவதால் இவற்றைத் தவிர்க்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கினார். இதனையடுத்து அமைச்சரவை மாகாண சபைகளின் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியதாக காணி மற்றும் பாராளுமன்ற மறு சீரமைப்பு அமைச்சரும், அமைச்சரவையின் இணை ஊடக பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
நேற்று மதியம் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலே அவர் இத்தகவலை வெளியிட்டார். அவர்தொடர்ந்தும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றங்கள் புதிதாக அமைத்தல், மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை தரமுயர்த்தல் தொடர்பில் அதுதொடர்பான நடவடிக்கைகளுக்கு சட்ட ரீதியான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இதன் காரணமாக முறையற்ற ரீதியில் ஸ்தாபிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தமது நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு தேவையான பொருளாதார பின்னணி இல்லாமலுள்ளன. இதனால் இதற்கான செலவுகளை மத்திய அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. இந்த உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் சேவைகளையும் வழங்க முடியாமலுள்ளன.
இதேவேளை, 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மறுசீரமைப்பு தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபார்சுகளின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குதல் மற்றும் தரமுயர்த்தல் தொடர்பான கொள்கையினை அறிமுகம் செய்வது தொடர்பில் சிபார்சுகளை முன்வைப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் 12 பேர் கொண்ட துறைசார்ந்தோர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்தக் குழுவின் சிபாரிசுகளுக்கு ஏற்பவே எதிர்காலத்தில் புதிய உள்ளூராட்சி மன்றங்கள் உருவாக்குதல் மற்றும் தரமுயர்த்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவின் இந்த ஆலோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.