பாலியல் தாக்குதல் ஏதாவது இடம்பெறும் போது உடனடியாக தாக்குதலுக்குள்ளாகுபவரின் பாதுகாப்பு வட்டாரத்துக்கு எச்சரிக்கை செய்யும் அணியக்கூடிய – ஒட்டக்கூடிய மிகவும் சிறிய உபகரணமொன்றை (ஸ்டிக்கர்) அமெரிக்க மாஸாசுஸெட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அந்த உபகரணத்தை ஆடையின் எந்தப் பகுதியிலும் ஒட்டிக்கொள்ள முடியும். அந்த உபகரணம் பயன்பாட்டாளரால் இயக்கப்பட்டோ அல்லது தானாக சுயமாக இயங்கியோ செயற்படும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக அதனை அணிந்திருப்பவர் சுய உணர்வோடு இருக்கும் போது மட்டுமல்லாது மயக்க நிலைக்கு சென்றிருக்கும் போதும் அந்த உபகரணம் அவரது பாதுகாப்பு வட்டாரங்களை எச்சரிக்கை செய்யும்.
பயன்பாட்டாளர் பாலியல் ரீதியில் அணுகப்படுவதை அந்த உபகரணம் கண்டறிகையில், அது உடனடியாக அவர் அதற்கு சம்மதத்துடன் இருக்கிறாரா என வினவி அவருக்கு எழுத்து வடிவ செய்தியை அனுப்பும்.
இதன்போது பயன்பாட்டாளர் பதிலளிக்கத் தவறின் அவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதாக அந்த உபகரணம் ஊகித்து பாரிய எச்சரிக்கை ஒலியை வெளிப்படுத்துவதுடன் அவரது பாதுகாப்பு வட்டாரத்துக்கு பயன்பாட்டாளர் இருக்கும் இடம் எங்குள்ளது என்பது தொடர்பான வரைபடத்தை உள்ளடக்கி எச்சரிக்கை தகவலை அனுப்பும். அத்துடன் அந்த உபகரணம் சம்பவ இடத்திலான ஒலிகளையும் பதிவுசெய்ய ஆரம்பிக்கும்.
இது தொடர்பில் அமெரிக்க மாஸாசுஸெட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊடக ஆய்வுகூடத்தின் ஆய்வாளர்களில் ஒருவரான இந்தியாவைச் சேர்ந்த மனிஷா மோகன் தெரிவிக்கையில், இந்த சிறிய உபகரணமானது பாலியல் ரீதியான தாக்குதல்களை இனம்கண்டு அறிவித்து உரிய நேரத்தில் பாதுகாப்பு அளிப்பதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.