தென்பகுதியில் காலநிலை இன்னும் சீரடைந்த பாடாக இல்லை. தொடரும் மீட்புப் பணிகளுக்கு மத்தியில் மழையின் அச்சுறுத்தலும் இருந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.
தெற்கில் ஓரிரு நாட்கள் பெய்த கடும் மழைவீழ்ச்சியே வரலாறு காணாத அழிவுக்கும் துயரத்துக்கும் வழி சமைத்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ள நிலையில் 100 பேர் வரை காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் தொகை 7லட்சத்தையும் தாண்டியுள்ள நிலையில் எண்ணாயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதேவேளை களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையை தென்பகுதியில் சில இடங்களில் வெள்ளம் வடிந்தும் கூட பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள முடியாத நிலையிலேயே இருந்து வருகின்றனர். பலர் தமது சொந்த பந்தங்களை இழந்து கண்ணீர் வடித்து வரும் நிலையில் மேலும் சிலர் தமது உற்றார் உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது என்று கூட அறிந்து கொள்ள முடியாதவர்களாக சோகத்தால் துவண்டு போயுள்ளனர்.
நாட்டில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு மனிதனினதும் மனிதாபிமான கடப்பாடாகும். அந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ள தென்னிலங்கை மக்களை கரை சேர்க்க தம்மால் இயன்ற உதவிகளை வழங்க அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.
தென்பகுதியில் பெரும்பாலான பிரதேசங்களில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறக்கூட முடியாதவர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட குறித்த பிரதேச மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை வழங்க சகல தரப்பினரும் தம்மாலான பங்களிப்பைச் செய்வது மிகவும் அத்தியாவசியமாகும்.
இயற்கையின் படுபாதகமான அழிவைச் சந்தித்த பிரதேசமாக தென்னிலங்கை காணப்படுகின்றது. பார்க்கும் இடமெங்கும் வெள்ளத்தால் சிதைவடைந்து சின்னாபின்னமான வீடுகளையும் கட்டிடங்களையுமே காணக்கூடியதாக இருக்கின்றது.
வெள்ளம் முழுமையாக வற்றினாலும் மக்கள் மீண்டும் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல என்பதையே அங்கு நிலவும் சூழல் உணர்த்துவதாகவுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அயல்நாடான இந்தியா விரைந்து வந்து உதவிக்கரம் நீட்டியுள்ளது. மூன்று கப்பல்களில் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
அதேபோன்று பாகிஸ்தானும் சீனாவும் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளன. மூன்று போர்க் கப்பல்களில் சீனக் கடற்படையினர் வருகை தந்துள்ளதுடன் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்னிலங்கையிலும் மலையகத்திலும் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித ஏற்றத்தாழ்வுகளுமின்றி நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏலவே நிவாரணங்கள் சரியான வகையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்து அவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்குவது இன்றியமையாதது.
இதேவேளை வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் சிக்குண்டு இறந்த ஒவ்வொரு நபருக்கும் நஷ்டஈடாக ஒரு லட்சம் ரூபாவை வழங்கவும் முற்றாகப் பாதிப்படைந்த வீடுகளுக்கு தலா 25 லட்சம் ரூபா என்ற அடிப்படையில் நஷ்டஈட்டை வழங்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி இந்தக் கட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கியமான விடயமொன்றை மிகவும் பகிரங்கமாக கூறியுள்ளார். அரசியல்வாதிகள் அபிவிருத்திக்குப் பதிலாக விருப்பு வாக்குகளை எதிர்பார்த்து செயற்படுவதாலேயே வெள்ளப் பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருப்பதாகக் கூறியுள்ளார்.
இவ்வாறான கசப்பான அனுபவங்களுக்குப் பின்னராவது அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசியல்வாதிகள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அழிவுகள், துயரங்களுக்கு மத்தியிலும் இன, மத பேதங்களை உருவாக்கி அதில் குளிர் காய்வதே இந்த நாட்டின் அரசியல்வாதிகளினதும் மதவாதிகளினதும் ஒரே குறிக்கோளாக இருந்து வருகின்றது.
பண்டைய காலத்தில் நீதி வழுவாது ஆட்சி நடக்க வேண்டும் என மன்னர்கள் குறியாக இருந்தனர். அறம் பிழைக்குமானால் அந்நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம் மற்றும் இயற்கையின் தாண்டவங்கள் அரங்கேறும் என பண்டைய மன்னர்கள் அஞ்சினார்கள். இதனையே சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் அறநெறி பிழைத்தோருக்கு அறமே கூற்றாக அமையும் என்று கூறியுள்ளார்.
அந்தவகையில் நீதி வழுவாத நல்லாட்சியின் வாயிலாகவே நாட்டைச் சிறந்த முறையில் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். தமது தலைசிறந்த போதனைகளால் போற்றப்படும் புத்தபெருமான் இந்த உலகத்தில் வெறுப்பை வெறுப்பால் ஒருபோதும் அணைக்க முடியாது வெறுப்பின்மையால் தான் அதனை அணைக்க முடியும். இதுவே நிலையான தர்மமாகும் எனக் கூறியுள்ளார்.
அந்த வகையில் நாட்டின் எந்தப் பகுதியாயினும் அங்கு துயருறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களின் துயர்துடைக்க நாம் பழகிக் கொள்வதே சிறந்த தர்மமாக இருக்கும். இன்று தென்பகுதி வெள்ளத்தால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் வடபகுதி வரட்சியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கரை லட்சம் மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நாட்டு மக்கள் அனைவரதும் துயர்துடைத்து நல்லாட்சியை உறுதிப்படுத்தும் திடசங்கற்பத்துடனேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றது. அதனை ஆக்கபூர்வமான முறையில் நிறைவேற்றி அனைத்து மக்களினதும் துயரைத் துடைக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.
உண்மையில் இது நல்லாட்சி அரசுக்கு வந்துள்ள பெரும் சோதனையாகவே பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் அனைத்துப் பேதங்கள் வேறுபாடுகளையும் இல்லாதொழித்து சகல இன மக்களையும் அரவணைத்து ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலைமையை அரசு சகல மட்டங்களிலும் உருவாக்க வேண்டும்.
அதன்மூலமே நாட்டில் அமைதி, சமாதானம், சுபிட்சம் என்பன தழைத்தோங்குவதுடன் பஞ்சம், பசி, பட்டினி மற்றும் இயற்கைச் சீற்றங்களும் கட்“டுக்கடங்கும்.
இதுவே எமது பாரம்பரிய வழிவந்த நம்பிக்கையுமாகும். எனவே அதனை உறுதி செய்வது அரசின் கடப்பாடு என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.