Breaking
Tue. May 7th, 2024

(மொஹமட் பாதுஷா)

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் எவ்வாறான ஒரு பொதியாக இருக்கும் என்பது பிரகடனப்படுத்தப்படவில்லை என்றாலும், முன்னர், தமிழீழம் என்று கற்பனையாக வரையறை செய்யப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டதாக அது அமைவதற்கான நிகழ்தகவுகளே அதிகமுள்ளன. வடக்கையும் கிழக்கையும் சட்டப்படி இணைப்பது என்றால், அங்கு வாழ்கின்ற சர்வ ஜனங்களின் சம்மதம் இன்றியமையாதது. இதன் பிரகாரம் முஸ்லிம்களின் சம்மதத்தை பெற்றுக் கொள்வதற்கான அன்றேல், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நாடிபிடித்துப் பார்ப்பதற்கான பணிகளை தமிழ்த் தேசியம் ஆரம்பித்திருப்பதை காண முடிகின்றது.

அண்மைக்காலமாக, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு ஆதரவாக தமிழ் அரசியல்வாதிகள் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் அரசாங்கம் அதனை முற்றாக நிராகரிக்கும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. முஸ்லிம்களின் பிரதான கட்சித் தலைவரான ரவூப் ஹக்கீமும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததாக அல்லது நிபந்தனை விதித்ததாக தெரியவில்லை. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீர்வுத் திட்டத்தை வழங்க வேண்டிய சர்வதேசப் பொறிக்குள் அரசாங்கம் மாட்டிக்கொண்டுள்ளதோ என்ற ஐயப்பாடு முஸ்லிம்களிடையே அதிகரித்து வருகின்றது.   மேலும் இழுத்தடிப்புக்கள், மெத்தனங்கள் இன்றித் தமிழ் மக்களுக்குத் தீர்வுப்பொதி ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் முஸ்லிம்கள் யாருக்கும் கருத்து முரண்பாடு இல்லை. ஆனால், இந்தத் தீர்வுப் பொதி குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்களின் வாழ்வியலில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்றே அவர்கள் இப்போது மெதுமெதுவாக சிந்திக்க தொடங்கியிருக்கின்றனர்.

புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாண சபைக்கு கணிசமான அதிகாரங்கள் வழங்கப்படுமாக இருந்தால், அதனால் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் நன்மை, தீமைகள் எவை? என்று சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. அந்த வகையில்,“வடக்கு, கிழக்கு இணைப்பை முற்றாக எதிர்க்க வேண்டும்” என்று முஸ்லிம்களிடையே ஒரு கருத்து இருக்கின்றது. அதேநேரம் “நிபந்தனயுடன் இணைக்கலாம்” என்ற இன்னுமொரு கருத்தும் உள்ளது. இங்கு நிபந்தனை என்பது முஸ்லிம்களால் விதிக்கப்படுவதாக இருக்கும். அதாவது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எப்படியாவது இணைக்கப்படப் போகின்றது என்றால் அதற்குள் முஸ்லிம்களின் கோரிக்கையை உறுதிப்படுத்திக் கொள்வதையே இது குறிக்கின்றது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம், சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் சுமார் 17 வருடங்களின் பின் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு அமைவாக 2007 ஜனவரியில் மீண்டும் தனித்தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்டன. முஸ்லிம் அரசியலின் நிகழ்கால ‘ரோல் மொடலாக’ பார்க்கப்படுகின்ற அஷ்ரப் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தையும் அதன்வழிவந்த அதிகாரமளிப்புக்களையும் ஏற்கவில்லை. இத்தனைக்கும் அஷ்ரப் தமிழரசுக் கட்சியின் மூலம் அரசியல் கற்றவர்.“அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தைப் பெற்றுத்தரவில்லை என்றால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான்” என்று மேடையில் முழங்கியவர். ஆனால் அவரால் கூட 90களில் கிழக்கில் உருவான நிலைமைகளை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே, மேற்படி இருநாட்டு ஒப்பந்தத்தை ‘முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச்சாசனம்’ என்று அவர் வர்ணித்தார். இதற்கு நியாயமான காரணங்களும் இருந்தன.

முஸ்லிம்களுக்கு தனிநாடு தேவைப்படவில்லை. ஆனால் பலநூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக்குழுக்களில் இணைந்து போராடி, மாண்டனர். மேலும் மசூர் மௌலானா, அஷ்ரப் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் பெரும்பான்மைக் கட்சிகளை புறந்தள்ளி தமிழரசுக் கட்சியின் ஊடாக அரசியலில் ஈடுபட்டனர். ஆனால் ஆயுதங்கள் தமது மனிதாபிமானத்தை இழந்து, தாம் அஃறிணைப் பொருட்கள் என்பதை நிரூபித்த கட்டம் ஒன்று வந்தது. ஆயுதங்கள் முன்கையெடுக்க – வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர், கிழக்கில் பள்ளிவாசல்களில் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த பல நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர், சில முஸ்லிம் கிராமங்கள் கபளீகரம் செய்யப்பட்டன. வயல்நிலங்களிலும் உயிர்கள் பலிகொள்ளப்பட்டன. அப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கியிருந்த அஷ்ரப், இதனால் சலிப்புற்றார். இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான ஒரு நிர்வாக நிலப்பரப்பு இருக்க வேண்டும் என்று எண்ணி, ‘இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம்’ என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

பின்னர் ‘கரையோர முஸ்லிம் அலகு’ என்ற ஆட்புல எல்லையை அதிகமதிகம் அவர் வலியுறுத்தினார். ஒரு சமயம் கரையோர அலகை அவர் கோரிய போது அதற்கெதிராக ஆவேசப்பட்ட தமிழ் அரசியல்வாதிகளும் இருந்தனர். ஆயினும் தமிழ் அரசியல்வாதிகள் அதன்பிறகு,முஸ்லிம்களின் அபிலாஷைகள் சரிக்குச்சமமாக நிறைவேற்றப்பட வேண்டும்என்று கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தனர் என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. எவ்வாறிருப்பினும் மோதல் இடம்பெற்ற காலத்தில் பெரும்பாலான தமிழ் அரசியல்வாதிகள் நடந்து கொண்ட விதம் முஸ்லிம்களின் மனங்களை வெற்றிகொள்வதாக இருக்கவில்லை.

இதற்கு அவர்கள் பக்கத்தில் ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆயினும் கடந்தகால தமிழ் ஆயுதப் போராட்டமும் அரசியல்வாதிகளும் ஏற்படுத்திய அதிர்விலிருந்து பெரும்பாலான வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் இன்னும் மீளவில்லை என்பதே உண்மையாகும்.   வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட்டமையால் ஏற்பட்ட கட்டமைப்புசார் மாற்றமானது, தனிமாகாண அல்லது கரையோர என்ற கோரிக்கையை தொடர்தேர்ச்சியாக வலியுறுத்த வேண்டியதன் அவசியத்தை குறைத்திருந்தது எனலாம். மீண்டும் வடக்கும் கிழக்கும் எந்த அடிப்படையிலேனும் இணைக்கப்படுமாக இருந்தால், இணைந்த வடகிழக்கிலான தம்முடைய இருப்பு தொடர்பில் இங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் திரும்பவும் அக்கறை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுவர். முஸ்லிம்கள் தங்களது அபிலாஷையை, சுயாட்சி உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிவரும்.

  யுத்தக் குற்றங்கள் சார்ந்த பல்வேறு சர்வதேச நெருக்கடிகளை அரசாங்கம் சந்தித்திருக்கின்ற ஒரு பின்புலத்தில் தீர்வுத்திட்டத்தை வழங்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேசத்தின் அழுத்தமும் புலம்பெயர் தமிழர்களின் செல்வாக்கும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்றால் மிகையில்லை. தீர்வுப் பொதியொன்றை வழங்கினால் உலக நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் இலங்கை விடயத்தில் நெகிழ்ச்சிப் போக்கைக் கடைப்பிடிக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த அடிப்படையிலேயே வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்ற விடயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், இவ்வாறான ஓர் இணைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கமும் சர்வதேசமும் விரும்பினாலும், அங்கு வாழும் மக்களில் அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் ஒப்புதலாதரவு இன்றியமையாததாகும். ஆகவேதான், முன்கூட்டியே வடக்கு – கிழக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான பகீரத பிரயத்தனங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பது போல தெரிகின்றது.   அண்மையில், ‘இணைந்த வடகிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரையும் ஏற்றுக்கொள்ள தயார்’ என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் கூறியிருக்கின்றார். அதனைத் தொடர்ந்து குடாநாட்டில் நடைபெற்ற சிவசிதம்பரத்தின் நிகழ்வில் உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ‘சேதமில்லாத விட்டுக் கொடுப்புக்கு தயார்’ என்று கூறியிருக்கின்றார்.

முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சித் தலைவரான ரவூப் ஹக்கீமுக்கு தமிழர்கள் வழங்குகின்ற மரியாதையும் விருந்தோம்பலும் நன்றிக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. அதனை வேறு கோணத்தில் நோக்கி, கொச்சைப்படுத்தக் கூடாது. அதுவேறு விடயம். ஆனால், முஸ்லிம்களிடம் இருந்து வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு சம்மதம் பெறுவதற்காக முதலில் ரவூப் ஹக்கீமை வளைத்துப் போடுவதற்கு காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் எதை விரும்புவாரோ அதைக் கொடுத்தேனும், பச்சை சமிக்கையை பெற்றுக் கொள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் முஸ்லிம் அரசியலில் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் உலவ விடப்பட்டுள்ளன. இவை எந்தளவுக்கு உண்மையாக இருக்குமென்பது தெரியாது. அதேபோன்று, எடுத்த எடுப்பில் ஹக்கீம் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவார் என்று சொல்லவும் இயலாது. என்றாலும், அவ்வாறு ஏதாவது துரதிர்ஷ்டம் நடந்து, முஸ்லிம்களுக்குரிய பங்கு தரப்படாது இவ்விரு மாகாணங்களும் இணைக்கப்படுமாயின் எதிர்காலம் மிக மோசமானதாக இருக்கும்.

எனவே முஸ்லிம்களும் அனைத்து அரசியல்வாதிகளும் உடன் சிந்தித்து செயற்பட வேண்டியிருக்கின்றது.   கிழக்கில் வாழ்கின்ற மக்கள் யுத்தகாலத்தில் புலிகளுக்கும்; படையினருக்கும் இடையில் சிக்குண்டு எவ்வாறு இழப்புக்களைச் சந்தித்தனர் என்பதை பற்றி ரவூப் ஹக்கீம் அறிந்திருப்பாரே தவிர அனுபவ ரீதியாக உணர்ந்திருக்க மாட்டார். மு.காவின் தேசிய தலைவர் என்ற உரிமையை விடுத்து, கிழக்கை தனது தாய்மண்ணாகவோ, வேறுவிதத்திலோ சொந்தம் கொண்டாட முடியாத நிலையிலேயே அவர் இருக்கின்றார்.

எனவே வடக்கு, கிழக்கு இணைப்பின் தாற்பரியத்தை அவர் வேறு ஒரு கோணத்தில் மதிப்பிடக் கூடும். அதேவேளை, முஸ்லிம்களுக்கு நன்மை தரும் ஓர் இமாலய கோரிக்கை என்றாலும், அவ்விடயம் சிங்கள மக்களையும் தமிழர்களையும் முகம் சுழிக்கவைத்து அவரது இமேஜை கெடுத்துவிடும் என்றால் அவர் நிச்சயமாக அக்கோரிக்கையை முன்வைக்க மாட்டார் என்பதே அவர் பற்றிய முஸ்லிம்களின் கடந்தகால மனப்பதிவாகும். அவ்வாறு கதைப்பது ‘இனவாதம்’ ஆகிவிடும் என்று ஒரு கற்பிதம் சொல்லப்படுதும் உண்டு. எனவே, இவ்வாறான சந்தேகங்களும், முஸ்லிம்களுக்கு எவ்வாறான தீர்வு வேண்டும் என்று அவர் தெளிவாக இன்னும் சொல்லாத காரணத்தாலும் முஸ்லிம்களிடையே ஒருவித மனக்கிலேசம் ஏற்பட்டிருக்கின்றது.   கிழக்கில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்களும் தேசிய காங்கிரஸ் கட்சியும்; வடக்கும், கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்ற கருத்தையே கொண்டிருக்கின்றனர்.

இதற்கு அனுபவ ரீதியான காரணங்களும் ஊகக் காரணங்களும் அவர்கள்வசம் இருக்கின்றன. அதையும் மீறி இரு மாகாணங்களும் இணைக்கப்படப் போகின்றன என்றால், அது முஸ்லிம்களின் நிபந்தனையை திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதாவது, ‘தனி முஸ்லிம் மாகாண அலகு’ உருவாக வேண்டும். இது நிலத்தொடர்பற்றதாக, இந்தியாவின் பாண்டிச்சேரியை ஒத்ததாக அமையலாம் என்று சொல்லப்படுகின்றது. மன்னார், முசலி போன்ற பிரதேசங்களையும் கிழக்கில் முஸ்லிம் உள்ளுராட்சி அதிகாரமுள்ள பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக இது அமைய வேண்டும் என்றும் மு.காவின் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி போன்ற ஓரிருவர் தனிப்பட்ட ரீதியில் வலியுறுத்தி வருகின்றனர். எது எப்படியிருப்பினும் இணைந்த வடகிழக்கிலா அல்லது பிரிந்த வடக்கு கிழக்கிலா வாழ்வது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கின்றது.

இதனை, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ஹக்கீமோ, றிசாட்டோ அதாவுல்லாவோ தனியே நிர்ணயிக்க முடியாது.  இதனை வடக்கு, கிழக்கிலும் அதற்கு வெளியிலும் அரசியல் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் கவனத்தில் எடுக்க வேண்டும். குறிப்பாக ரவூப் ஹக்கீமுக்கு பாரிய பொறுப்பிருக்கின்றது. முஸ்லிம்களுக்கு பயன்படாத ஒரு தீர்வையோ, மிகச் சாதாரணமான ஒரு கரையோர மாவட்டத்தையோ எடுத்துக் கொண்டுவந்து, பெரிய ஒரு தீர்வுபோல முஸ்லிம்களிடையே பிரசாரம் செய்யக் கூடாது.

18 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்தது போன்று கண்ணைத் திறந்துகொண்டு இந்த சமூகத்தை படுகுழியில் தள்ளிவிடவும் கூடாது. கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரை வைத்துக் கொண்டு ஒரு வீதிக்கு பெயரைக் கூட மாற்ற முடியாதிருக்கின்ற சூழலில் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் என்ற மாயைக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள் மயங்கிவிழத் தேவையில்லை. ஒருவேளை, இது விடயத்தில் ரவூப் ஹக்கீம் தவறுசெய்தாலும் அதற்கெதிராக மற்றைய அரசியல்வாதிகள் குரல் கொடுக்க வேண்டும்.13718790_1845903275643012_523353893561899648_n

தமிழ்ப் பொது மக்களும் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் முஸ்லிம்களின் பக்கம் இருக்கின்ற நியாயங்களை புரிந்து கொள்ள வேண்டும். தனிநாட்டுக்காக போராடாவிட்டாலும் யுத்தம், முஸ்லிம்களில் பாரிய எதிர்விளைவையும் மாறாத வடுவையும் நிகழ்த்திவிட்டுப் போயிருக்கின்றது என்பதை மறுதலிக்கக் கூடாது. இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது அந்த நிலப்பரப்பில் வாழ்கின்ற எல்லா இனக் குழுமங்களையும் சரிசமமாக திருப்திப்படுத்தாத பட்சத்தில், தீர்வில் இருந்து இன்னுமொரு முரண்பாடு கருக்கொள்ளலாம். தீர்வுத்திட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களின் விருப்பமின்றி, மாகாணங்களை இணைத்து எதிர்காலத்தில் இரு இனங்களையும் பிரித்துவிடக் கூடாது.13726609_1845382165695123_5665797216889127728_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *